நாதமுனிகளின் கழல் பணிவோம்; நாரணனின் அருள் பெறுவோம்

ஸ்ரீ மந் நாதமுனிகள் அவதார தினம் – ஆனி அனுஷம் – 27.6.2026

வைணவ சமயத்தில் வியக்கத்தக்க ஒரு செய்தி உண்டு. இறைவனை அடைவது மனிதனுக்கு லாபமா, அல்லது மனிதனை அடைவது இறைவனுக்கு லாபமா?

எல்லோரும் இறைவனை அடைவது மனிதனுக்கு லாபம் என்றும் அதுவே மனித வாழ்வின் குறிக்கோள் என்றும் சொல்லுவார்கள்.ஆனால், வைணவ சமயத்தில், இல்லை; இல்லை. மனிதனை அடைவது தான் இறைவனுக்கு லாபம் என்று ‘‘சேதனலாபம் ஈஸ்வரனுக்கு” என்கின்ற பதத்தால் குறிப்பிடுகின்றார்கள். காரணம், தனக்குரிய ஆத்ம வஸ்துவை அடைய இறைவன் விரும்புகின்றான்.தன் சொத்தை அடைய அவன் விரும்புவதால் அவனை சுவாமி என்கிறோம்.(ஸ்வம் -சொத்து).

ஆத்மாவைச் சூழ்ந்து இருக்கிற மாயையை நீக்கி பக்குவப்படுத்தி ஏற்றுக்கொள்வதற்கு, இறைவன் படாதபாடுபடுகின்றான் என்பது வைணவ சமயக் கருத்து.அதற்காக இறைவன் பலவித முயற்சி களைச் செய்கின்றான். அதிலே ஒன்று சாஸ்திரங்களைக் கொடுத்தது.‘‘மேலிருந்த நந்தா விளக்கை கண்டு நல்லதும் கெட்டதும் விவேகைக்கு பிரதீபமான கலைகளை நீர்மையினால் அருளிச்செய்தான்” என்பது ஆச்சரியமான ஆச்சார்ய இருதய சூத்திரம்.

கலைகள் என்பது வேதம். இந்த வேதமும், வேதத்தின் பாகங்களான ஸ்மிருதி, இதிகாச, புராணங்களும், மனிதன் எப்படி வாழ வேண்டும்,எப்படி ஞானத்தைப் பெற வேண்டும் என்கின்ற விவரங்களையெல்லாம் குறிப்பிடுகின்றன.ஆனால், இந்தக் கலைகள் மனிதனுக்குப் பயன்படவில்லை. புரிந்து கொண்டோர் சிலர்; பின் பற்றியோர் அதைவிட சிலர்; இதனால் இறைவன் அடுத்த முயற்சியாகத்தானே அவதாரங்களை எடுத்தான். அந்த அவதாரங்களின் மூலம் வேதசாரக் கருத்துக்களின் விளக்கமாக வாழ்ந்து காட்டினான்.

ஆனால், அவைகள் அந்தந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளாயின.அது பிற்கால மனிதர்களுக்குப் பயன்படாமல் போனதை எண்ணி தன்னுடைய ஐம்படைகளையும் நித்திய சூரியகளையும் ஆழ்வார்களாக அவதரிக்கச் செய்தான். ஆழ்வார்கள் எளிய தமிழில், பக்தியை, உலகத்தில் பரப்பி மனிதர்களுடைய அற்ப ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் நீக்கி, ஞானம் தருவதற்கு முயற்சி செய்தார்கள்.ஆனால் அவர்கள் அருளிய ஞானத் தமிழாகிய அருளிச் செயலும் கூட ஒரு கட்டத்தில் மறைந்து போனது.

அப்பொழுதுதான் இறைவன் அடுத்த முயற்சியாக ஆசாரிய பரம்பரையை உருவாக்கினான். இவர்கள் மூலம் ஆழ்வார்களின் கருத்தையும், வேதத்தின் கருத்தையும், மக்களுக்கு உபதேசித்து, நல்வழிப்படுத்தி, தன்னை உணர்ந்து, அடையச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டான். அந்த ஆசாரிய பரம்பரையில் தொடக்கம்தான் சுவாமி நாதமுனிகள்.நாதமுனிகள் கி.பி. 823ம் ஆண்டு ஆனி மாசம் அனுஷ நட்சத்திரம் பௌர்ணமி நாளில் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் என்கின்ற ஊரிலே அவதரித்தார். இவருடைய தந்தையார் பெயர் ஈஸ்வர பட்டாழ்வார். அவதரித்த குலம் சொட்டை நம்பி குலம்.

இளமையிலேயே கல்வி கேள்விகளிலும்,பகவத் பக்திகளிலும், வேத ஆகாம சாஸ்திரங்களிலும் மிகச் சிறந்தவராக விளங்கிய நாதமுனிகள் இசையிலும் யோக சாஸ்திரத்திலும் வல்லவராக விளங்கினார். இவருடைய இயற்பெயர்ஸ்ரீ ரங்கநாதமுனி. இதிலேஸ்ரீ ரங்கம் மறைந்து, நாதமுனி என்கிற பெயரே நிலைத்தது. நாதமுனி என்கிற பெயருக்கு ஏற்ப இவர் ஓம்கார நாதத்தினை, மனதின் உள்ளே செலுத்தி, ரீங்காரமான எம்பெருமானின் இருப்பை தன்னுள்ளே உணர்ந்தவராக இருந்தார்.

திருக்கோயிலுக்குச் சென்று கைங்கரியம் செய்வது, மாலைகள் கட்டிக் கொடுப்பது, இசை பாடுவது என்கின்ற தொண்டில் முழுமையாக ஈடுபட்டிருந்த இவருடைய கவனத்தை ஒரு பாடல் மாற்றியது.ஒரு முறை மேல் கோட்டையிலிருந்து வந்திருந்த யாத்திரிகர்கள் இறைவன் திருமுன்பு

ஆராவமுதே அடியேன் உடலம்நின் பால் அன்பாலே
நீராய் அலைய கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்கிற பாசுரத்தை உருக்கமாகப் பாடினார்கள். இந்தப் பாசுரத்தை அவர்கள் இசை கூட்டி, அழகான குரலில் பாடியதைக் கேட்டதும் நாதமுனிகள் செவிகள் நிறைந்தன.  அவர் மனம் முழுக்க அப் பாடலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

“ஆராவமுதே” எத்தனை அழகான சொல்.
அப்படியானால் ஆறிய அமுதமும்
உண்டோ?
பாடல் சிந்தனையைத் தூண்டியது. அதிலும் நிறைவாக “குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்” என்கின்ற வரியில் அவர் கவனம் சென்றது. அவர்கள் பாடி நிறுத்தியவுடன்,
நாதமுனிகள் ஆர்வத்தோடு கேட்டார்.

‘‘ஐயா, இப்பாசுரம் யாருடையது.?”

‘‘இதை அருளிச்செய்தவர் நம்மாழ்வார்.இப்பாசுரங்களின் தொகுப்பை திருவாய்மொழி என்று சொல்வார்கள்.” ‘‘அருமை. அருமை. ஞானத் தமிழ் கேட்டு என் செவிகள் பயன் பெற்றன.இது அந்தாதி தொடையில் இருக்கிறது. இப்பாடலின் கடைசி பாசுரம் ஆயிரத்துள் இப்பத்தும் என்று வருகின்றது. மற்ற பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, ‘‘எங்களுக்கு இந்தப் பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்” என்று அவர்கள் சொல்ல, “அப்படியானால் மீதி 990 பாடல்கள் இருக்க வேண்டுமே” என்று அவர் மனம் நாடியது. அப்பாடல்களைத் தேடி பலப்பல இடங்களில் ஓடியது. அது கிடைக்கும் வரை உணவும் உறக்கமும் இன்றி மனம் வாடியது.

கடைசியில் அவர் ஆழ்வாரின் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்கே பராங்குசதாசர் என்கின்ற பெரியவரைச் சந்தித்து விசாரித்தார். அப்பொழுது நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின்12 பாடல்களையும் அவர் தந்தார்.‘‘இப்பாடல்களை 12 ஆயிரம் முறை ஒரே நோக்கத்தோடு நம்மாழ்வாரை தியானித்து பாராயணம் செய்தால், நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார். உங்கள் விருப்பம் நிறைவேறும்” என்றார்.

உடனடியாக அந்தப் பன்னிரெண்டு பாடல்களையும் பன்னீராயிரம் முறை பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சை யோக வழியில் நிலைநிறுத்தி ஜெபம் செய்தார் யோகீஸ்வரரான நாதமுனிகள்.
அதன் பலனாக நம்மாழ்வார் காட்சியளித்து நாதமுனிகளுக்கு அவர் விரும்பிய ஆயிரம் திருவாய்மொழிப் பாசுரங்களையும், மற்ற ஆழ்வார்களின் 3000 பாசுரங்
களையும், அதற்கான விளக்கத்தையும் தந்து மறைந்தார்.நாதமுனிகள் தான் தேடிப்போன அசல், வட்டியோடு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார்.

இனி இந்தத் தங்கத் தமிழை தரணியெங்கும் பரப்புவதே தன்னுடைய தலையாய நோக்கம் என்று முடிவெடுத்தார். அப்பாடல்களை எல்லாம் ஆயிரம் ஆயிரம் பாடல் களாகத் தொகுத்து நான்காயிரமாக்கினார். அதனை மறுபடியும் இயல்பா, இசைப்பா என்று இரண்டு பிரிவாகப் பிரித்து, 3000 பாடல்களையும் இசை கூட்டி பாட வேண்டும்;ஆயிரம் பாடல்களை நிதானமாகச் சேவிக்க(இயலாக) வேண்டும் என்கின்ற ஒரு வரையறையை ஏற்படுத்தினார்.

இசை வல்லுனரான நாதமுனிகள் பலப்பல பண்களில் இப்பாசுரங்களை அமைத்து, தன்னுடைய மருமக்களான “கீழை அகத்தாழ்வார்”, ‘‘மேலை அகத்தாழ்வார்” என்கின்ற இருவரிடமும் பொறுப்பை ஒப்படைத்து, ஆழ்வாரின் ஈரத்தமிழை அகிலமெங்கும் பரப்பச் செய்தார். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.இதனை ஒரு அழகான பாடல் எடுத்துரைக்கும்.

காளம் வலம்புரியன்ன நற் காதல் அடியவர்க்கு
தாளம் வழங்கி தமிழ்மறையின்இன்னிசை தந்த வள்ளல்
மூளும்தவநெறி மூட்டிய நாதமுனிகள்கழலே
நாளும் தொழுதெழுவோம் நமக்கு இனி யார் இந்த நானிலத்தே.

நாதமுனிகளுக்கு பல சீடர்கள் இருந்தனர். தம்முடைய சீடர்களை எல்லாம் ஒரு நாள் அழைத்து, ‘‘யோக சாஸ்திரத்தை ஒரு சிலருக்கும்,ஞான சாஸ்திரமான ஆழ்வார்களின் அருளிச் செயலை ஒரு சிலருக்கும் நான் கற்பிக்கப் போகிறேன். நீங்கள் உங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல, பகவானை உள்ளத்துள் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள இதயத்தில் தரிசிக்கும் யோக சாஸ்திரக் கலையை, குருகை காவலப்பன் என்ற சீடருக்கு வழங்கினார்.

புண்டரீகாட்சர் என்ற ஒரு சீடரிடம், ‘‘உனக்கு யோகசாஸ்திரம் வேண்டுமா? ஞான சாஸ்திரம் வேண்டுமா?” என்று கேட்க, ‘‘ஒருவர் மட்டும் பகவானை தரிசிக்கும் யோக சாஸ்திரம் அடியேனுக்குத் தேவையில்லை. அனைத்துலகும் வாழ வகை செய்யும் ஞான சாஸ்திரமான ஆழ்வார் களின் அருளிச் செயலை அடியேனுக்கு பிரசாதிக்க வேண்டும்” என்று கேட்க, ‘‘ஏன் இப்படிக் கேட்கிறாய்?” என்ற கேள்விக்கு பதிலாக புண்டரீகாட்சர் ஒரு வாசகம் சொன்னார்.

‘‘சுவாமி! பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?”

எத்தனையோ மக்கள்அஞ்ஞானத்தால் ஆத்ம வஸ்துவை அறியாமல்தவிக்கும் பொழுது ஒரே ஒருவர் மட்டும் உய்வு பெறுகின்ற யோகக் கலையால் என்ன பலன்? எனவே எனக்கு ஞானக் கலைதான் வேண்டும். அதை வைத்துக் கொண்டு, இந்த உலகத்தோர் உய்வு பெறும் வழியைத் தேட வேண்டும்” என்று சொல்ல, நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவரைக் கட்டியணைத்து, ‘‘ உய்யக்கொண்டார்” என்று வாழ்த்தினார்.

இப்படிப்பட்ட நாதமுனிகள் ஒரு நாள் தம்முடைய இல்லத்துக்கு, தான் இல்லாத நேரத்தில் தன்னைத் தேடி சிலர் வந்ததை அறிந்தார். இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஒரு குரங்குமாக அவர்கள் வாசலுக்கு வந்து தங்களை விசாரித்தார்கள், என்று சொன்னவுடன் வந்தவர்கள் சாட்சாத் இராமனும் இலட்சுமணனும் சீதையும் அனுமனும் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் எங்கே போனார்கள் என்று வழியெல்லாம் விசாரித்துக்கொண்டு பரபரப்போடு வீதியில் ஓடினார்.

வழியில் ஒரு குரங்கின் அடி தெரிந்தவுடன் அங்கே உள்ளவர்களிடம் விசாரித்தார். ‘‘ஆமாம்; இந்த வழியே தான் சென்றார்கள்” என்று அவர்கள் வழிகாட்ட, அந்த வழியிலே ஓடினார். அப்படி முதல் முதலாக ஒரு குரங்கின் அடியை பார்த்த இடம் குரங்கு அடி என்று அக்காலத்தில் வழங்கப்பட்டு, இப்பொழுது காட்டு மன்னார்குடி அருகே, ‘‘குருங்குடி” என்கிற பெயரில் விளங்குகின்றது. சற்று தூரம் போனவுடன் ஓரிடத்தில் தெய்வீக மணம் மிக்க பூ விழுந்து கிடந்தது.நாதமுனிகள் ஒரு பெண்ணின் தலையில் இருந்து விழுந்த பூவாக இருக்கிறது. ஆக, அவர்கள் இங்கே தான் இருக்க வேண்டும் என்று அங்கு உள்ளவர்களிடம் விசாரிக்க,அவர்களும், ‘‘இப்பொழுது தான், இந்த வழியாகச் சென்றார்கள்” என்று வழிகாட்ட, அந்த ஊர் பூ விழுந்த நல்லூர் என்று வழங்கப்படுகிறது.

இன்னும் சற்று தூரம் அவர்கள் காட்டிய வழியில் சென்று அங்கே உள்ளவர்களிடம் விசாரித்தார். ‘‘இரண்டு ஆண்கள், ஒரு பெண், ஒரு குரங்கு இப்பக்கம் சென்றார்களோ ? நீங்கள் கண்டீர்களா?” என்று கேட்க, ‘‘ஆமாம் சற்று நேரம் முன்னால் பார்த்தோமே . இந்த வழியாகத் தான் சென்றார்கள்” என்று சொல்ல, அந்த ஊருக்கு கண்டமங்கலம் என்று பெயர். தொடர்ந்து, ‘‘என்னைப் பார்க்காமல் போய் விட்டீர்களே” என்று கதறியபடி,அவர்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று ஆவேசமாக ஓடியவர், கடைசியிலே கங்கைகொண்ட சோழபுரத்திற்கு முன்னால், சொர்க்க பள்ளம் என்கின்ற ஊரிலே ஓரிடத்தில் விழுந்து மூர்ச்சை அடைந்தார்.

இங்கேயே அவர் ஆவி பிரிந்தது. எம்பெருமான் காட்சிதந்து, அணைத்துக் கொண்டு தன்னுடைய பதத்துக்கு எழுந்தருளினார். இது மாசி மாதம் நடைபெற்றது. அவர் மூர்ச்சித்து விழுந்த இடத்தில் அவருடைய திருவரசு அமைக்கப்பட்டு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.யோக மார்க்கத்தை பிரதானமாகஸ்ரீ மந் நாதமுனிகள் நியாயதத்வம், புருஷநிர்ணயம் மற்றும் யோகரஹஸ்யம் என்று மூன்று நூல்களை இயற்றினார்.நாதமுனிகள் இல்லையென்றால் வைணவத் தமிழாகிய ஆழ்வார்களின் பாசுரங்கள் இல்லை. இதை பின்வருமாறு மணவாள மாமுனிகள் குறிப்பிடுகின்றார்.

தெருளுற்ற வாழ்வார்கள் சீர்மை யாரறிவார்
அருளிச் செயலை யறிவாரார்- அருள்பெற்ற
நாதமுனி முதலாம் நந்தேசி கரையல்லால்
பேதைமனமே யுண்டோ பேசு.

வைணவ குருபரம்பரை இந்த நாதமுனிகளிடம் இருந்துதான் தொடங்குகிறது. அவர் வழியே வந்த ஆசாரியர் தான் ஆளவந்தாரும் ராமானுஜரும். அவரைப் போற்றும் வாழித் திருநாமம் இது.

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

நாதன்

Related Stories: