சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: சிந்தாமணி நல்லூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: விக்கிரம சோழன் (முதலாம் குலோத்துங்க
சோழனின் மகன்) பொ.ஆ.1127.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைதியான சிந்தாமணி நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன்கோயில், பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலை மற்றும் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
சோழர்கால வரலாற்றுப் பின்னணி
இக்கோயிலில் உள்ள கல்வெட்டு களின்படி, இங்குள்ள முதன்மை தெய்வம் (மூலவர்) தொடக்கத்தில் `குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர்’ என்று அழைக்கப்பட்டுள்ளார். விக்கிரம சோழன் தனது தந்தை முதலாம் குலோத்துங்க சோழனின் நினைவாகவும், அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், இந்த ஆலயத்தை நிர்மாணித்து, மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்தக் கிராமத்திற்குச் `சிந்தாமணி’ என்ற பெயர் வந்ததற்கும் ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் அரசியான மதுராந்தகிக்கு, `தீன சிந்தாமணி’ என்ற அரசப் பட்டம் இருந்தது. அவரது நினைவாக இப்பகுதிக்கு வைக்கப்பட்ட பெயர், காலப்போக்கில் மருவி `சிந்தாமணி நல்லூர்’ என்று அழைக்கப்படலாயிற்று.
வைத்தீஸ்வரர் – பிணி தீர்க்கும் இறைவன்
இங்குள்ள சிவலிங்கத்தை மனமுருகி வழிபட்ட பக்தர்களின் பல்வேறு நோய்களும், உடல் உபாதைகளும் அதிசயத்தக்க வகையில் குணமடைந்த தாகக் கூறப்படுகிறது. நோய் களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டவராக விளங்குவதால், பிற்காலத்தில் இத்தெய்வம் `வைத்தீஸ்வரர்’ (மருத்துவக் கடவுள்) என்று போற்றப்பட்டு, வழிபடப்பட்டுவருகிறது.
இறைவன்:ஸ்ரீ வைத்தீஸ்வரர்.
இறைவி:ஸ்ரீ தையல் நாயகி.
அழகிய கோஷ்ட மூர்த்திகள்
கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் பிற்காலச் சோழர் காலத்துக்கே உரிய நேர்த்தியான மற்றும் அழகான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. இக்கோயிலின் கோஷ்டங்களில் (சுவர் மாடங்கள்) பின்வரும் தெய்வங்களின் பேரெழில் சிற்பங்களைக் காணலாம். விநாயகர், தட்சிணாமூர்த்திலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, உமா சகித மூர்த்தி, பிட்சாடணர், கால பைரவர்.
பழங்காலக் கல்வெட்டுகள்
கோயிலின் மகாமண்டபத்தின் தென் பகுதி கல்வெட்டுகளில் விக்கிரம சோழனின் கல்வெட்டுச் சான்றுகள் இன்றும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த பழங்காலக் கல்வெட்டுகள் முக்கியமாக, கோயில் வளாகத்தில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் `நந்தா விளக்குகளைப்’ பராமரிப்பதற்காக சோழ மன்னர்களாலும், மக்களாலும் வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் நிவந்தங்கள் (நன்கொடைகள்) பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளன.
மது ஜெகதீஷ்
