இந்த வார விசேஷங்கள்

27.6.2026 – சனி சனி பிரதோஷம்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில், மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்த சனி மஹாபிரதோஷம், சிறப்பாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. சனிப் பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால், ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இன்று சனிக்கிழமை. சனி பகவானுக்கு உரிய நாள். அதோடு இன்று அனுஷ நட்சத்திரம். சனி பகவானுக்கு உரிய நட்சத்திரம். இது தவிர, இன்று பிரதோஷ நாள். இது மூன்றும் ஒன்றாகச் சேர்வது அபூர்வமானது. “பிற தோஷங்கள் நீங்க வேண்டுமானால், பிரதோஷ வழிபாடு செய்’’ என்று சொல்வார்கள். அதுவும் ஆனி மாதத்தில் அதாவது தேவர்களின் மாலை நேரம், கிட்டத்தட்ட பிரதோஷ வேலை நேரத்தில் சனி மகாபிரதோஷம் வருவது இந்த ஆண்டில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று, ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது சனி பிரதோஷம்.
ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான், மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு சனிக் கிழமை திரயோதசி திதி தினம். சனிப்பிரதோஷ தினத்தன்று, சிவ வழிபாடு செய்தால், அஷ்டமச் சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டமச்சனி, ஏழரை நாட்டுச் சனி, சனிதிசை மற்றும் புத்திகள் தரும் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். சிவபெருமானின் திருவடிவங்களில் ஒருவர் காலபைரவர். சனிபகவான், கால பைரவரை குருவாகக் கொண்டவர். எனவே சிவனை வழிபடுபவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. தான, தர்மங்களை செய்ய, சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறுதானம்கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது.
27.6.2026 – சனி நரசிம்மர் கருடசேவை – திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள தெள்ளிய சிங்கர் (யோக நரசிம்மர்) ஆண்டுதோறும் கருட வாகனத்தில் எழுந்தருளும் வைபவம், திருவல்லிக்கேணி உற்சவங்களில் மிகவும் சிறப்புமிக்க ஒன்றாகும். திருமங்கை ஆழ்வார் தமது பாசுரங்களில் திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கரின் பெருமையைப் தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே என்று பாடியுள்ளார். கருடன், வேதங்களின் வடிவமாகக் கருதப்படுகிறார். கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவது, பகவான் தமது பக்தர்களைக் காக்க விரைந்து வருவதை உணர்த்துகிறது.
27.6.2026 – சனி நாதமுனிகள் திருநட்சத்திரம்
வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ நாத முனிகள். அவர் 1200 வருடங்களுக்கு முன்னால் நம் தமிழ்நாட்டில் காட்டுமன்னார்குடி என்னும் ஊரில், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களுக்கும், தமிழ் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை அளப்பரியது. இசைக் கலையையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காக அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம், “அரையர் சேவை’’. அரையர் என்றால் தலைவன் என்று பொருள். திருமாலுக்கு அரையன் என்ற பெயர் உண்டு. “அன்றாயர் குலமக்களுக்கு அரையன் தன்னை’’ என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
முக்கியமான உற்சவங்களில் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் ஓதப்பட வேண்டும் என்பதற்காகவே, இம்மூன்று கலைகளையும் அறிந்த, அரையர் மரபை உண்டாக்கினார். நாதமுனிகள், தன் காலத்தில் உருவாக்கினார். திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின்போது, அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையும் தனித்துவமாக அணிந்திருப்பர்.
காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். அவர்களுக்கு பரம் பரையாக வந்த கைத்தாளமும் இத்தகு அரிய கலை வைணவக் கோயில்களில் மட்டும் காணப்படும். நாதமுனிகளின் அவதார உற்சவம் ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி முதலிய எல்லாக் கோயில்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதோடு, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பஜனை மடங்களிலும், வைணவர்கள் இல்லங்களிலும் அனுசரிக்கப்படும்.
28.6.2026 – ஞாயிறு ஸ்ரீ ரங்கநாதர் ஜேஷ்டாபிஷேகம்
பெருமாளுக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி மற்றும் ரத்தினக் கவசங்கள் காலப் போக்கில் பராமரிக்கப்பட வேண்டியிருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை அவற்றை அகற்றி திருமஞ்சனம் செய்து, மீண்டும் கவசங்களை அணிவிக்கும் வைபவமே ஜேஷ்டாபிஷேகம் எனப்படுகிறது. ஸ்ரீ ரெங்கத்தில் இது ஆனி மாதத்தில் நடைபெறுகிறது. ஆசாரியர்கள் ஜேஷ்டாபிஷேகத்தை வெளிப்புற சுத்திகரிப்பாக மட்டுமல்லாமல், நம் மனத்தில் படிந்திருக்கும் அகங்காரம், மமகாரம் போன்ற மாசுகளை நீக்கி, பகவானின் அருளுக்கு தகுதியானவர்களாக மாற வேண்டும் என்பதைக் குறிக்கும் வைபவமாக விளக்குகின்றனர்.
29.6.2026 – திங்கள் திருமாலிருஞ்சோலை முப்பழ உற்சவம்
ஆனி மாதம், அழகருக்கு நடைபெறும் உற்சவம். தமிழர் மரபில் மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களும் “முப்பழம்’’ என்று போற்றப்படுகின்றன. இவை இனிமை, வளம், செழிப்பு ஆகியவற்றின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. முப்பழ உற்சவ நாளில், பெருமாளுக்கு மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகிய மூன்று பழங்களும் மிகுதியாக சமர்ப்பிக்கப்படுகின்றன. பெருமாளின் திருமேனிக்கு எதிரில் பழங்கள் அலங்கரித்து வைக்கப்படுவதும், முப்பழ நைவேத்தியம் செய்வதும் வழக்கம். பின்னர் அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப் படுகின்றன.
29.6.2026 – திங்கள் அருணகிரிநாதர் குருபூஜை
இன்று ஆனி மூலம். அருணகிரிநாதர் குரு பூஜை. 5-ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஒப்பற்ற அருளாளரான இவரின் குரு பூஜை தினம் வெகு காலம் வரையில் அறியப் படாமலே இருந்து வந்தது. அதனைக் குமரக் கடவுளின் திருவருளால் கண்டறிந்து அறிவித்து அருளியவர் பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச சுவாமிகள். பாம்பன் சுவாமிகள் திருப்புகழ் பாடிய தமது குருநாதர் அருணகிரிநாதர் சுவாமிகட்கு, குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். அருணகிரிநாதரின் குருபூஜை தினம் `ஆனி மூலம்’ என்று வெளியிட்டு அருளிய பாம்பன் சுவாமிகள், தன் அவதாரக் காலத்தில் `அருணகிரியாரின் குரு பூஜைத் திருநாளை’ ஆலயங்கள் தோறும் கொண்டாடுமாறு செய்தருளினார்.
இன்று அருணகிரிநாதர் அருளிய இந்தப் பாடலைப் (கந்தர் அலங்காரம்) பாட முருகப் பெருமானின் அருள் கிடைக்கும்.
“செங்கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நற்பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே!!’’
29.6.2026 – திங்கள் காரைக்கால் மாங்கனி விழா
காரைக்காலில் வாழ்ந்தவர் புனிதவதி. சிவபக்தை. இவர் கணவர் பரமதத்தன். ஒருநாள் இரண்டு மாங்கனிகளைத் தந்தான். மதிய வேளையில், சிவபெருமான், சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் வேண்டினார். புனிதவதியும் அன்னத்துடன், தன் கணவர் பரமதத்தன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு படைத்தார். வீடு திரும்பிய புனிதவதியின் கணவர் பரமதத்தன், இரண்டு மாங்கனிகளில் ஒன்றை வாங்கி புசித்தார். மாங்கனி நன்கு இனிக்கவே, மீதியிருந்த மாங்கனியையும் புசிக்க வேண்டி, எடுத்து வரச்சொன்னார். புனிதவதி திகைத்து இறைவனை மனதார வேண்டினார். இறைவனின் அருளால், புனிதவதியார் கையில் ஒரு மாங்கனி கிடைத்தது. இறைவன் அருளால் கிடைத்த மாங்கனியை சுவைத்த பரமதத்தனுக்கு, மிகமிகச் சுவையாக இருக்கவே, இம்மாங்கனி நான் ஏற்கனவே புசித்த மாங்கனியைவிட அமைப்பும், சுவையும் மிகமிக மாறுபட்ட காரணத்தை வலியுறுத்திக் கேட்க, புனிதவதியார் இறைவனின் திருவிளை யாடலை எடுத்துரைத்தார்.
இதை நம்ப மறுத்த பரமதத்தன், மீண்டும் ஒரு மாங்கனியை இறைவனிடமிருந்து வரவழைத்து தருமாறு கேட்க, புனிதவதியும் சிவபெருமானை மனதார நினைத்து வேண்டி, மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றதை நேரில் கண்ட கணவன் பரமதத்தன் மனதில் பயம் கொண்டார். இறையருள் வாய்த்த புனிதவதியைக் கண்டு பயந்து, அவரை விட்டு விலகினார்.
கணவனே தன்னை ஒதுக்கிய பின்னர், தனக்கு இந்த மனித உடல் இனி எதற்கு என்று இறைவனை வேண்டி பேய் உடல் பெற்றார். பின் பேயுடலுடன் கயிலாய மலைக்கு சென்று சிவபெருமானை சரணடைந்தார் என்பது புராண வரலாறு. இந்த விழா, ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி விழா நடைபெறும். காரைக்கால் அம்மையார் மற்றும் சிவபெருமான் திருவீதியுலா நடைபெறும். பல இடங்களில் மாங்கனிகள் பக்தர்களை நோக்கி வீசப்படுகின்றன; அவற்றைப் பெறுவது அருளாசியாகக் கருதப் படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
29.6.2026 – திங்கள் வட சாவித்ரி விரதம்
வட சாவித்ரி விரதம் என்பது கணவனின் நீண்ட ஆயுள், குடும்ப நலம் மற்றும் மங்கல வாழ்வு வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் ஒரு சிறப்பான விரதமாகும். இது சாவித்ரி -சத்யவான் கதையை அடிப்படையாகக் கொண்டது. அதிகாலையில் நீராடி சுத்தமான ஆடை அணிய வேண்டும். ஆலமரத்திற்கு பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் கயிறு அல்லது நூலை ஆலமரத்தைச் சுற்றி கட்டி வலம் வரவேண்டும். சாவித்ரி – சத்யவான் கதையைப் படிக்கவோ, கேட்கவோ வேண்டும். கணவரின் ஆயுள், குடும்ப நலம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். விரத முடிவில் தானம் வழங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
2.7.2026 – வியாழன் திருவோண விரதம்
மகாவிஷ்ணு, திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பார்கள். குறிப்பாக, வாமன அவதாரம் நிகழ்ந்தது திருவோணத்தில். `திருவோணத்தான் உலகாளும் என்பர்களே’ என்பது பெரியாழ்வார் வாக்கு. இந்த திருவோணத்தில் பெரும்பாலான திருமால் ஆலயங்களில் திருமஞ்சனம் நடைபெறும். சில இடங்களில் சுவாமி புறப்பாடும் உண்டு. இன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவுக்குரிய விஷ்ணுசஹஸ்ர நாமம் போன்ற தோத்திரங்களைப் படித்து, ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதி வழிபடுவதன் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.
3.7.2026 – வெள்ளி சங்கடஹர சதுர்த்தி
எந்தத் தடைகளாக இருந்தாலும் அது விலகுவதற்கு விநாயகரை வழிபட வேண்டும். எந்தப் பூஜைகளிலும் அவருக்கு முதலிடம் உண்டு. சதுர்த்தி நாள் அவருக்குரிய விசேஷமான நாள். சங்கடங்களை எல்லாம் போக்குகின்ற நாள் என்பதால், சதுர்த்தி நாளில் விரதம் இருந்து, அறுகம்புல் மாலையைச் சாற்றி, ஆனை முகத்தோனை வணங்க வேண்டும். இன்று விரதம் இருந்து அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று மாலையில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தினால் ஆயுள், ஆரோக்கியம் வளரும். இஷ்ட சித்திகள் அதாவது நம்முடைய எண்ணங்கள் பலிக்கும்.

Related Stories: