எட்டாம் பாவம்(Bhavam- தன்மை) என்பது பல ரகசியங்களை உள்ளடக்கியது. ஜோதிட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, எட்டாம் பாவத்தைப் பற்றி சுவையாக சொல்லுவார். திருமணமான பெண், சீதனங்களோடு வருவாளா வரமாட்டாளா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, எட்டாம் பாவத்தைத்தான் பார்க்க வேண்டும். காரணம், ஏழாம் பாவம் வருகின்ற மனைவி.
எட்டாம் பாவம் அவள் மூலமாக வருகின்ற வருமானம். மனைவி வருமானத்தைக் கொண்டு வருகிறாள் என்றால், பிறந்தவீட்டுச் சீதனம், புகுந்த வீட்டுக்கு வருகிறது என்று பொருள். இதோடு ஆறாம் பாவம் பதினோராம் பாவத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். எப்பொழுதும் தனித்த பாவங்கள், ஒரு செயலை முழுமையாகச் செய்யாது.
இங்கே ஆறாம் பாவம் என்பது, அவர்கள் இழப்பதையும் அதாவது பெண் வீட்டுக்காரர்கள் பணத்தை விட்டுத் தருவதையும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு அது லாபமாக வந்து சேர்வதையும் குறிக்கும். எனவே, ஒரு ஜாதகருக்குத் திருமணத்திற்குப் பிறகு மனைவி மூலமாகவோ அல்லது அவளுடைய குடும்பத்தினர் மூலமாகவோ வரக்கூடிய சீதனம், சொத்து, உயில் வழி லாபம் அல்லது எதிர்பாராத பணவரவு ஆகியவற்றைத் தீர்மானிப்பதில், 8ம் பாவம் முதன்மைப் பங்கு வகிக்கிறது.
லக்னத்திற்கு 6ம் வீடு என்பது 7ம் வீட்டிற்கு (மனைவிக்கு) 12ம் வீடாகும் (விரய ஸ்தானம்) பெண் வீட்டார் தங்கள் கையை விட்டு ஒரு தொகையையோ, பொருளையோ இழக்கிறார்கள் (விரயம் செய்கிறார்கள்) என்பதை இந்த 6ம் பாவம் காட்டுகிறது.
லக்னத்திற்கு அது 6ம் பாவம் (ருண, ரோக, சத்ரு ஸ்தானம்) என்றாலும், அது கடன்பட்டாவது அல்லது கஷ்டப்பட்டாவது பெண் வீட்டார் சீதனம் தருவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகவும் மாறுகிறது. இதோடு 2ம் பாவத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். நவீனக் காலத்தில், இந்த 8ம் பாவம் என்பது வெறும் சீதனம் மட்டுமன்றி, “வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் மனைவி’’ அமைவதையும் குறிக்கிறது. மனைவி, தன் சுய சம்பாத்தியத்தின் மூலம் கணவனின் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துவதும் இந்த பாவத் தொடர்புகளின் கீழ் அடங்கும்.
ஜோதிடத்தின் அடிப்படையான ஒரு விஷயம், தனித்த எந்த பாவங்களின் பலன்களையும் எப்பொழுதும் நாம் எடுக்கவே முடியாது. அதனால், எட்டு என்பது கஷ்டம் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. எட்டாம் பாவம் பொதுவாக கஷ்டம் என்றாலும், அந்த கஷ்டம் நாமாக ஏற்படுத்திக் கொண்ட கஷ்டமா, தானாக வந்த கஷ்டமா அல்லது அந்த கஷ்டத்தின் நிவர்த்தியின் பொழுது நமக்கு ஏதேனும் நற்பலன்கள் ஏற்படுமா என்பதையும் இந்த எட்டாம் இடம்தான் காட்டிக் கொடுக்கும். எட்டாம் பாவம் என்றாலே “ஆயுள் மற்றும் அவமானம், தடைகள், விபத்துக்கள்’’ என்று பொதுவான ஜோதிட நூல்கள் பயமுறுத்தும் வேளையில், அதன் பின்னால் இருக்கும் தத்துவார்த்தமான மற்றும் உளவியல் ரீதியான நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எட்டாம் பாவம் என்பது, லக்னத்திற்கு எட்டாம் வீடு. லக்னம் என்பது நமது எண்ணம், புத்தி, செயல்பாடு. லக்னாதிபதியே பலவீனமாகி 8ல் மறைந்தாலோ, அல்லது 8ம் அதிபதி லக்னத்தோடு (முக்கியமாக 3, 6 போன்ற பாவங்களோடு) தொடர்பு கொண்டாலோ, அது நமது சொந்த புத்தியீனத்தால் அல்லது தவறான முடிவுகளால் தேடிக்கொண்ட கஷ்டத்தைக் குறிக்கும்.
உதாரணத்திற்கு, பேராசைப்பட்டுத் தவறான முதலீடு செய்வது, சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் இறங்கி அவமானப்படுவது போன்றவை நாமாக ஏற்படுத்திக் கொண்ட கஷ்டங்கள். 8ம் பாவத்தோடு சனியோ, ராகுவோ அல்லது பாதகாதிபதியோ தொடர்பு கொள்ளும் போது, சம்பந்தமே இல்லாமல் நமக்குக் கஷ்டங்கள் வந்து சேரும். நாம் எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டோம், ஆனால் திடீர் விபத்து, அடுத்தவர்களால் வரும் பழிச்சொல், எதிர்பாராத நஷ்டம், இயற்கைச் சீற்றங்கள் போன்றவை “தானாக வரும் கஷ்டங்கள்’’.
இது முற்றிலும் முற்பிறவி கர்ம வினையின் (பிராரப்த கர்மா) வெளிப்பாடு. எட்டாம் பாவம் என்பது மறுபிறவி மற்றும் மாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும் பாவம். ஒரு மனிதன் முற்றிலும் அழியும் நிலைக்குச் சென்று, அங்கிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல எப்படி உயிர்த்தெழுந்து வருகிறான் என்பதை 8ம் பாவமே தீர்மானிக்கும்.
8ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ அல்லது குரு, சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின் பார்வை பெற்றோ இருந்தால், அந்த கஷ்டம் தற்காலிகமானது. அந்தக் கஷ்டத்தின் முடிவில் ஜாதகருக்குப் பெரும் ஞானம், பக்குவம், அல்லது பெரிய பொருளாதார லாபம் (திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து, காப்பீட்டுத் தொகை) கிடைக்கும். ஒரு நோயாளி கடுமையான அறுவை சிகிச்சைக்குப் பின் (8ம் பாவம் தரும் வலி) பூரண குணமடைந்து புதிய ஆரோக்கியம் பெறுவது போல, இந்த பாவத்தின் நிவர்த்தி ஒரு மனிதனை ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும். அதைப் போல, எட்டாம் பாவம் தரும் கஷ்டங்கள் என்பவை வெறும் தண்டனை அல்ல; அவை மனிதனைச் செதுக்கும் கருவிகள். கஷ்டம் எங்கிருந்து வருகிறது, அதன் நோக்கம் என்ன என்பதை 8ம் பாவத்தின் கிரக நிலைகளைக் கொண்டு அறியலாம்.
கடன் கொடுப்பதையோ அல்லது வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதையோ 8, 12 ஆம் பாவங்கள் குறிப்பிடும். இதில் பாவ தொடர்புகளையும் இணைத்து நாம் பார்க்க வேண்டும். எட்டாம் பாவம் எப்படி வேலை செய்கிறது என்பதை எட்டாம் பாவம் எந்த பாவத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை வைத்துக் கொண்டுதான் நம்மால் நிர்ணயம் செய்ய முடியும். பொதுவாக 6, 8, 12 இன்று இணைப்பு இருப்பதாக வைத்துக் கொண்டால், நாம் கடன் (6) அதிக கடன் (8) அதனால் ஏற்படும் அவமானங்கள் (12) அதனால் பெரும் தண்டனை (12) அல்லது ஊரை விட்டு வெளியேறிவிடுதல் (12) கெட்ட பெயர் வாங்குதல் (12), சிறைவாசம் (12) என்று வரிசையாக சொல்லிக் கொண்டே வரலாம்.
இன்னொரு விதத்தில் நோய் (6) அந்த நோயின் தீவிரம் (8) அந்த நோயினால் மருத்துவமனையில் சேருதல் (12) தொடர் சிகிச்சை(12), என்றும் சொல்லலாம். ஆனால் இந்த ஆறு, எட்டு, பன்னெண்டுக்கு நடுவில் ஒரு ஐந்து, ஒரு 11 என்ற பாவங்கள் குறுக்கே வந்துவிட்டால், நோய் தீவிரமாக இருந்தாலும்கூட நீங்கள் அந்த நோயிலிருந்து பூரணமாக விடுதலை அடைந்து பழையபடி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதையும் காட்டும். இங்கே எட்டாம் பாகம், 12ஆம் பாவம் தீவிரமாக இருந்தாலும்கூட, பதினொன்றாம் பாவம், 12 ஆம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக அமைவதால், நோயிலிருந்து அல்லது மருத்துவமனையில் இருந்து விடுபட்டு, வீட்டுக்கு ஆரோக்கியமாக வந்து சேர்வதையும் குறிக்கிறது.
எனவே தனி பாவங்களை வைத்துக்கொண்டு நாம் ஒரு நிர்ணயம் செய்துவிட முடியாது. இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் எட்டாம் பாவத்தில் இருக்கிறது.
