மத்திய பிரதேச ஆன்மீக நிகழ்ச்சியில் ‘டான்ஸ்’ ஆடிய மனைவி 2 மகன்கள் வெட்டிக் கொலை: ரயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை

மொரேனா: ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மனைவி நடனமாடிய ஆத்திரத்தில், மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கோடரியால் வெட்டிக்கொலை செய்த நபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் கிசன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராம் குஷ்வாகா. இவருடைய மனைவி ரவிதா குஷ்வாகா. இவர்களுக்கு ஆரவ் மற்றும் தேபு என இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த ‘பகவத் கதா’ ஆன்மீக நிகழ்ச்சியில் ரவிதா ஆர்வ மிகுதியால் நடனமாடியுள்ளார். தனது மனைவி பொது இடத்தில் ஆடியதை பலராம் கடுமையாக எதிர்த்ததால், தம்பதிக்குள் குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக ரவிதாவை பலராம் தாக்கியதால், அவர் தனது தந்தை வீட்டுக்குச் சென்று தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து சமாதானம் பேசி சில நாட்களுக்கு முன்புதான் ரவிதா மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்த ரவிதாவிடம் குத்தாட்டம் போட்ட விவகாரத்தை எடுத்துச் சொல்லி பலராம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இச்சம்பவம் விபரீதமாக முடிந்தது. கடும் ஆத்திரமடைந்த பலராம் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து ரவிதா மற்றும் அவரது 2 மகன்களையும் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தார். ரத்தம் சொட்டச் சொட்ட அங்கிருந்து வெளியேறிய பலராம், அருகில் இருந்த தண்டவாளத்திற்குச் சென்று வேகமாக வந்த ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ரவிதாவின் தந்தை கூறுகையில், ‘விழாவில் ஆட்டம் ஆடிய விவகாரத்தால் பலராம் எனது மகளை அடித்து சித்திரவதை செய்து வந்தார், அவரை வீட்டில் வைத்திருக்கவும் அவர் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ஒரே குடும்பத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: