தானே: வினாத்தாள் கசிந்ததாக சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, இன்று நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறவிருந்தது. நூற்றுக்கணக்கானோர் இந்த தேர்வை எழுந்த விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தானேவில் சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளை வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை பிவாண்டியில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். சந்தேகத்திற்குரிய இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை சரிபார்க்க உடனடியாக மகாராஷ்டிரா மாநில தேர்வுக் கவுன்சிலின் மூத்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். தீவிர ஆய்வுக்கு பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக தயாரிக்கப்பட்ட உண்மையான வினாத்தாளில் உள்ளதைப் போல பல கேள்விகள், அங்கிருந்த வினாத்தாள்களில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து அங்கிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் ஷா, ஆகாஷ் குமார் மற்றும் அரியானாவைச் சேர்ந்த தீரஜ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வை ரத்து செய்து மகாராஷ்டிரா மாநிலத் தேர்வுக் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவரைக் கைது செய்ய ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிராவில் 37 இடங்களில் உள்ள 1,728 மையங்களில் மொத்தம் 6 லட்சம் தேர்வர்கள் ஆசிாியர் தகுதித்தேர்வை எழுதவிருந்தனர்.
* நீட் வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், மகாராஷ்டிரா பா.ஜ அரசில் நடந்த இந்த சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் செயல்: ராகுல்
மகாராஷ்டிரா ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,’ மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு. மீண்டும் ஒரு தேர்வு ரத்து. இம்முறை மகாராஷ்டிராவின் ஆசிரியர் தகுதித் தேர்வு.
நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையானது கொள்ளையடிக்கும் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது; இதனால் நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்ல, இது இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடும் செயலாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* கரப்பான்பூச்சி கட்சி கண்டனம்
போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் அரசு மீண்டும் தோல்வியடைந்துள்ளதை மகாராஷ்டிரா ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் காட்டுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்தார். இதற்கிடையே ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கல்வியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் இன்று முதல் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்க உள்ளார்.
