அயோத்தி: ராம பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையையும், தாராள மனப்பான்மையையும் உலுக்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் சுமார் ரூ.200 கோடி காணிக்கை மற்றும் நன்கொடை நிதிகள் முறைகேடு செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் செலுத்திய தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தைக் கோயில் ஊழியர்களே திட்டமிட்டுத் திருடியது சிறப்பு புலனாய்வுக் குழுவின் ரகசிய சிசிடிவி கண்காணிப்பில் அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்பது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த 2024 ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோயில் கட்டி திறக்கப்பட்டது. இக்கோயில் முழுக்க முழுக்க இந்துக்களின் பணத்தில் இருந்து கட்டப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, கோயில் கட்டுமானத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை’ பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்தது. இதற்காக ‘ஸ்ரீ ராம் மந்திர் நிதி சமர்ப்பண அபியான்’ என்ற பெயரில் 2021 ஜனவரி 15 முதல் பிப்ரவரி 27 வரை (43 நாட்கள்) நாடு தழுவிய மாபெரும் நிதி திரட்டும் இயக்கம் நடத்தப்பட்டது. இந்த வெறும் 43 நாட்களில், அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.3,500 கோடிக்கும் அதிகமான நிதி வந்து சேர்ந்தது.
இந்த நிதியின் ஒரு பகுதியை (சுமார் 50% மேல்) கொண்டே பிரதான கோயில் மற்றும் அதன் வளாகக் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. கோயில் நிர்வாகத்தை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையே கவனித்து வருகிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி இக்கோயிலுக்கு வருகை தந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோயிலின் காணிக்கை நிதியில் சுமார் ரூ.7 கோடி முதல் ரூ.7.5 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பவன் பாண்டே முதன்முதலில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், இந்து தர்ம சேனாவின் தலைவர் சந்தோஷ் துபே போன்றோர், பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கும்பாபிஷேக விழாவின் போது பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 60 கிலோ வெள்ளிக் கட்டிகள், தங்கக் கதாயுதம் மற்றும் அறக்கட்டளையின் இருப்பில் இருந்த சில புனிதச் செங்கற்கள் இருப்புப் பட்டியலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கோயில் கணக்கு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் மகிபால் சிங் பரபரப்பு புகார் அளித்தார். இந்த விவகாரம் ஒன்றிய மற்றும் உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து, அறக்கட்டளையின் கோரிக்கையின் பேரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு, பணம் எண்ணப்படும் அறைகளில் ஊழியர்களுக்குத் தெரியாமல் ரகசிய சிசிடிவி கேமராக்களை வைத்து அவர்கள் கண்காணித்தபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பணக்கட்டுகளைத் தங்களது ஆடைகளுக்குள் மறைத்து திருடிச் சென்றுள்ளனர். காணிக்கைப் பணத்தை வங்கிக்கு எடுத்துச் செல்லும்போது, ஆவணங்களில் உள்ள எண்ணிக்கையை விடக் கூடுதல் ரூபாய் தாள்களைக் கட்டுகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்தியுள்ளனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய கம்மல், மூக்குத்தி, கொலுசு, வளையல் போன்ற தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் ஊழியர்கள் திட்டமிட்டுத் திருடியது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டது. காணிக்கை வரத்து அதிகமாக இருந்த திருவிழா நாட்களில், சிசிடிவி கேமராக்கள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டிருந்ததும், சுமார் 8 மாத கால சிசிடிவி பதிவுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் அம்பலமானது.
விசாரணையை முடித்த எஸ்ஐடி குழு, தனது 20 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில், அயோத்தி போலீசார், அறக்கட்டளை ஊழியர்கள் 8 பேர் மீது திருட்டு, குற்றவியல் ரீதியான நம்பிக்கைத் துரோகம், மோசடி மற்றும் கூட்டுச் சதி (பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் லவ்குஷ் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, மனிஷ் யாதவ், ராம்சங்கர் யாதவ் (டின்னு), சுபாஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா, மற்றும் கருணேஷ் பாண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் டின்னு யாதவ் என்பவர் கண்காணிப்புப் பொறுப்பில் இருந்தவர், மற்றவர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியர்கள் ஆவர். கைதானவர்களிடமிருந்து சுமார் ரூ.79.85 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, ராமர் கோயில் நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வந்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உண்டியல்களைத் திறக்கும் சாவிகள் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த நிலையில், இவ்வளவு பெரிய மோசடி நடந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்ததால் சம்பத் ராய் பதவி விலகினார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணத்தில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு அல்லது திருட்டு நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை நடத்தப்பட்ட பிறகே சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்பது உறுதியாகும். இந்த விவகாரம் இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையை பெரிதும் உலுக்கி உள்ளது.
மேலும், ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் மற்றும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜய் ராய் ஆகியோர், ‘‘அயோத்தியில் காணிக்கைத் திருட்டும், உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் நில அபகரிப்பும் நடப்பதுதான் பாஜவின் புதிய மாடல். சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா போன்ற பெரிய தலைவர்களைக் காப்பாற்றவே கீழ்மட்ட ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டினர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்திக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்த பின் பேசுகையில், ‘‘கீழ்மட்ட ஊழியர்கள் 8 பேரை மட்டும் கைது செய்திருப்பது வெறும் கண்துடைப்பு. நீண்ட காலமாக நடந்துள்ள இந்த மெகா மோசடியை உயர்மட்ட நிர்வாகிகளின் துணையின்றி கீழ்மட்ட ஊழியர்கள் மட்டும் செய்திருக்க முடியாது. இதில் தொடர்புடைய பெரிய மனிதர்களை அரசு மறைக்கப் பார்க்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
* கணக்கு வழக்கு
* கோயில் அறக்கட்டளைக்கு வந்துள்ளதாகக் கூறப்படும் மொத்த ரொக்க நன்கொடை மதிப்பு ரூ.3,500 கோடி.
* கடந்த நிதியாண்டில் (2024-25) கோயில் பெற்ற ஆண்டு வருமானம் ரூ.327 கோடி. அதில் ரூ.153 கோடி நேரடி காணிக்கை, ரூ.173 கோடி வட்டி வருமானம்.
* சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பவன் பாண்டே முதன்முதலில் குற்றம் சாட்டிய முறைகேட்டுத் தொகை ரூ.7 கோடி – ரூ.7.5 கோடி
* தற்போதைய விசாரணையில் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களால் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சிகளாலும் பொதுநல மனுக்களாலும் சந்தேகிக்கப்படும் மொத்த தொகை ரூ.200 கோடி.
* விசாரணை வளையத்தில் வங்கி ஊழியர்கள்
காணிக்கைப் பெட்டிகளைத் திறப்பது மற்றும் திருவிழாக் காலங்களில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட 50 ஊழியர்கள், தற்போது எஸ்ஐடியின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளனர். கைதான 8 பேரிடம் இருந்து இதுவரை ரூ.79.85 லட்சம் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த முறைகேட்டில் 6 வங்கி ஊழியர்கள் சந்தேக பட்டியலில் உள்ளனர். வங்கி ஊழியர்களிடம் விசாரணை
* என்னென்ன விதிமீறல்?
ராமர் கோயிலின் நன்கொடைகள் எவ்வாறு, எவ்வளவு தொகை கையாடல் செய்யப்பட்டது என்ற குறித்த விவரங்கள் இன்னும் விசாரணையில் இருந்தாலும், சிறப்பு விசாரணைக்குழு தனது ஆரம்ப கட்ட அறிக்கையில் சில முக்கிய குறைபாடுகளை சுட்டிக் காட்டி உள்ளது. உண்டியல் பணத்தை எண்ணும் போது பாதுகாப்பு காவலரை பணியமர்த்துதல், பணம் எண்ணும் அறைக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் பணியாளர்களை சோதனை செய்தல் மற்றும் நன்கொடை எண்ணும் செயல்முறையின் சிசிடிவி காட்சிகளை 180 நாட்களுக்கு பாதுகாத்தல் போன்ற நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மீறப்பட்டதாக கூறி உள்ளது.
ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் ஓட்டுரான ராமசங்கர் யாதவ் எனும் தின்னு யாதவ் பல உண்டியல்களின் சாவிகளை தன்வசம் வைத்திருந்ததாக எஸ்ஐடி அதிகாரிகள் கூறி உள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகளின் அலட்சியம் காரணமாக இந்த முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
