பெங்களூரு: காதலியை ஓடும் காரில் சரமாரியாக குத்திய காதலன், பின்னர் காரை வெடிக்கச்செய்து பலியானார். இதில் காதலி மற்றும் டிரைவர் தப்பினர். கர்நாடகா மாநிலம் தும்கூரு அருகே தனது காதலியுடன் பெங்களூருவை சேர்ந்த நாகேந்திரா என்பவர் வாடகை காரில் சென்று கொண்டிருந்தார். காதலர்களான இவர்களுக்கு இடையே அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரா தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து காதலியை குத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தி, காயமடைந்த இளம்பெண்ணுடன் இறங்கி ஓடினர். அப்போது கார் திடீரென்று வெடித்ததாக கூறப்படுகிறது. கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் தும்கூரு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே நாகேந்திரா தங்கள் மகளைக் கடத்திவிட்டதாகக் கூறி, இளம்பெண்ணின் பெற்றோர் பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருக்கின்றனர்.
இது குறித்து தும்கூரு மாவட்ட எஸ்.பி அசோக் கூறுகையில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக கல்லபெல்லா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காரில் ஒருவர் தீயில் கருகி இருந்ததைக் கண்டனர். பெங்களூருவிலிருந்து காரில் அங்கோலா சென்று கொண்டிருந்ததபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் ஏற்பட்ட வெடிப்புக்குக் காரணம் வெடிகுண்டு என ஓட்டுநரும் பலியானவரின் காதலியும் போலீசில் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர் குழு, தடயவியல் ஆய்வகம் மற்றும் உடனடி புலனாய்வுக் குழு ஆகியவை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றன. காரில் வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இருப்பினும், காருக்கு அருகில் சாலையில் வெடிபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்றார்.
