ஊட்டி மண்டல போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஜூலை 3ல் பேரணி, ஆர்ப்பாட்டம்

*நிரந்தர ஓட்டுநர், நடத்துநர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ஊட்டி : நிரந்தர ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஊட்டி மண்டல போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து வரும் ஜூலை 3ம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊட்டி மண்டலத்தில் ஊட்டி கிளை 1 மற்றும் 2, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 5 கிளைகள் உள்ளன.

கிராமப்புற பேருந்துகளில் 10 முதல் 15 வருடங்களாக வார ஓய்வின்றி பணியாற்றி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ‘ரெஸ்ட் டியூட்டி’ வழங்குவதாக கூறி அந்த பேருந்துகளில் இருந்து இறக்கிவிட்டு, அதற்கு பதிலாக தினக்கூலி ரூ.550 அடிப்படையில் தற்காலிக பணியாளர்களுக்கு போக்குவரத்து கழக நிர்வாகம் பணி வழங்கியுள்ளது.

ஊட்டி மண்டலத்தில் மட்டும் எடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஏடிபி, பிஎம்எஸ், எஸ்சி.எஸ்டி. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிரந்தர ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்கனவே அவர்கள் பணிபுரிந்து வந்த பேருந்துகளில் இருந்து இறக்கி விடக்கூடாது என தொழிற்சங்கங்கள் கடந்த ஒரு மாத காலமாக அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், போக்குவரத்து கழக நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரும் ஜூலை 3ம் தேதி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும், கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஊட்டி மண்டலத்தில் இயக்கப்படும் மேன்பவர் பேருந்துகளில் இருந்து நிரந்தர தொழிலாளர்களை இறக்கிவிட்டு தினக்கூலி தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் போக்கு தொழிலாளர்கள் நலன் சார்ந்தது அல்ல.

மாறாக, வேலைவாய்ப்பு இன்மையை பயன்படுத்தி குறைந்தபட்ச கூலி சட்டத்திற்கு மாறாக தினம் ரூ.550 என்ற அடிப்படையில் பணியமர்த்துவது உழைப்பை சுரண்டுவதாகும். நிரந்தர ஊழியர்களுக்கு பணி வழங்காமல் அவர்கள் பணிக்கு வரும்போது பணியில்லை என காரணம் காட்டி விடுப்பு எடுக்க வைக்கின்றனர்.

நாளடைவில் விடுப்பு காலாவதியான பின் ஆப்சென்ட் போட்டு ஊதிய இழப்பை போக்குவரத்து கழகம் ஏற்படுத்துகிறது. இதுபோன்று நிரந்தர ஊழியர்களை பழிவாங்குவதால் ஓய்வுபெறும்போது அவருக்கு சேர வேண்டிய பிஎப் பணிக்கொடையில் கணிசமான தொகை குறைகிறது. ஓய்வூதியமும் குறைகிறது. தொழிலாளர்களின் சம்பளம் அதிகமாக உள்ளது.

அதனால்தான் நஷ்டம் ஏற்படுவதாக கூறும் அதிகாரிகள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவோ, சலுகைகளை விட்டு கொடுக்கவோ தயாராக இல்லை. மலை வழித்தடங்களில் சட்டப்படி ஒரு ஷிப்ட் டூட்டிக்கு 110 கிமீ இயக்க வேண்டும். ஆனால், சட்டத்தை மீறி கிமீ நீட்டிப்பு செய்கிறது. எனவே முறையான ‘சீனியாரிட்டி டியூட்டி’ முறையை அமல்படுத்த வேண்டும் என வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கியுள்ளோம்.

‘மேன் பவர்’ பேருந்துகள் உள்ளடக்கிய அனைத்து பேருந்துகளும் ‘சீனியாரிட்டி டியூட்டி’ முறையாக இருக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் விருப்பத்தை இதில் புகுத்தக்கூடாது. தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான நடைமுறையை போக்குவரத்து கழக நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதை தவிர்த்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காலி பணியிடங்களை நிரப்பி சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

போதிய பணிமனை ஊழியர்கள் இல்லாத நிலையில் பேருந்து பழுதுக்கு ஊழியர்கள் மீது பழி சுமத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உடனடியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் உள்ளோம்.

ஆனால், போக்குவரத்து கழகம் இந்த பிரச்னையில் எவ்வித முடிவும் எடுக்காமல் எங்களை வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறது. எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 3ம் தேதி ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்க உள்ளோம்’’ என்றனர்.

தமிழ்நாட்டிலேயே ஊட்டி மண்டலத்தில் மட்டும் இந்த பிரச்னை நீடிக்கும் நிலையில் ஜூலை 3ம் தேதி நடைபெறும் பேரணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளில் இருந்தும் நிரந்தர ஊழியர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்பதால் அன்றைய தினம் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

கூடலூரிலும் தொழிலாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊட்டி மண்டலத்தில் இயக்கப்படும் ‘மேன் பவர்’ பேருந்துகளில் இருந்து நிரந்தர தொழிலாளர்களை இறக்கிவிட்டு தினக்கூலித் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி, தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டும் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்தும், நிரந்தர தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணப்பயன்களை குறைக்கும் நடவடிக்கையை கண்டித்தும், தொழிலாளர் நலனுக்கு எதிரான சீனியாரிட்டி பணி முறையை கைவிட்டு முறையான சீனியாரிட்டி பணி முறையை அமல்படுத்த கோரியும் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.

தொமுச கிளை செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவை செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், சிஐடியு துணை செயலாளர் கணேசன், ஏஐடியூசி குணசேகரன், முருகேசு, யோகேஸ்வரன், பிஎம்எஸ் ராமரகு, யோகேஸ்வரன் மற்றும் திலீப்ராஜ், உதயகுமார், அசோகன், மது, ராஜேந்திரன், யோகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: