நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரைவில் முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை: நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக, வரும் ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை துறை ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலகம் தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, தினமும் காலையில் ஒரு துறை, மதியத்திற்கு மேல் ஒரு துறை என நாள் ஒன்றுக்கு இரண்டு துறைகளுடன் இந்த ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ‘வெற்றி தமிழகம்’ என்ற தொலைநோக்கு ஆவணத்தின் கீழ் ஒவ்வொரு துறைக்கும் என மொத்தம் 436 திட்டங்கள் ஒதுக்கப்பட்டு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒதுக்கப்பட்ட அந்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை வகைப்பிரித்து, நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் எவை, அதற்குத் தேவையான நிதி ஆதாரம் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தலைமைச் செயலகம் தரப்பிலிருந்து துறைச் செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: