ஆனி பூரம்: 21.6.2026 – அமர்நீதி நாயனார் குருபூஜை
ஒருவருக்கு நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சொன்னால், அவரை இறை அருள் நெருங்கிக் கொண்டே வருகிறது என்று பொருள். பிரசவ வலியால் துடிக்கின்ற ஒரு பெண்மணி உச்சக்கட்ட துன்பத்தை அடைந்தபிறகே, அந்தத் துன்பமெல்லாம் ஒரு துன்பமே இல்லை என்று சொல்லும்படியான, மிகப்பெரிய சந்தோஷத்தை, ஒரு குழந்தைக்குக் தாயாகி அடைகிறாள்.
அதைத்தான் நம் ஆழ்வார்கள் கதைகளிலும், நாயன்மார்களின் கதைகளிலும், இன்னும் பல பக்தர்களின் கதைகளிலும் பார்க்கிறோம். நினைத்துக்கூட பார்க்க முடியாத துன்பங்கள் அடைந்தபிறகு, அவர்கள் இறை அருளைப் பெற்றிருக்கிறார்கள். அப்படித் தாங்க முடியாத ஒரு சோதனையின் முடிவில், தயாபரனின் அருளைப் பெற்ற அடியார்களில் ஒருவர்தான் அமர்நீதி நாயனார்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார். 7ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு சிவனடியார்க்குப் பணிசெய்வதையே, தனது ஆத்மா கடைத்தேறும் வழியாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு உணவு அளித்தல், அவர்கள் விரும்பி அணியும் ஆடை (கீழ்கோவணம்) அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 20ஆவது சிவத்தலமான திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில், தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ளது. இங்கு வில்வமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய சிவபெருமான்,ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள்.திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டிய திருத்தலம்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பல்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
– என்று இத்தலத்து ஈசனை திருநாவுக் கரசர் பாடிப் பரவினார்.
இத்தலத்தில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கினார். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம். பழையாறையில் பிறந்த அமர்நீதி நாயனார், சிவனடியார்கள் வந்து செல்லும் திருநல்லூர் சிவத்தலத்தில் குடியேறினார்.
சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காக மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது படைத்து மகிழ்ந்தார். நாட்கள் நகர்ந்தன.ஈசனின் எழில் காட்சி ஒரு நாள் நேரில் கிடைக்காதா என ஏங்கினார்.அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். ஒரு நாள் அந்தணர் குலத்துப் பிரம்மச்சாரியாகக் கோலங்கொண்டார். இடையில் ஒரு கோவணம். முகத்தில் ஜொலிக்கும் ஒளி. திருநீறு பூசிய எழில் நெற்றி. கூர்மையான நாசி. எவரையும் வசீகரிக்கும் பார்வை.
கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டு.
அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.
இதுவரை அவரை பார்த்ததேயில்லை அமர்நீதியார்.
புதிய வரவான அவர் வரவு கண்டு, மிக முகமலர்ச்சியோடு வரவேற்றார். உபசரித்தார். அமுதுண்ண அழைத்தார். பிரம்மச் சாரியார் அந்த வேண்டுகோளுக்கு இசைந்தார்.
“உம்முடைய இந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. செல்வத்தை முறையாகச் செலவழிப்பதும், பண்பு நிறைந்த சொற்களையும் பரிந்து பேசுவதும் கண்டு மகிழ்ந்தோம். இன்று உன் திருமடத்தில் அமுது ஏற்போம்.. அதற்கு முன் யாம், கன்னி நதியான காவிரியில் நீராடி நீர்க்கடன் செய்துவிட்டு வருகின்றோம்.” “அப்படியே ஆகட்டும்” என்று மகிழ்ச்சி யோடு விடை கொடுத்தார் நாயனார்.
நான்கடி எடுத்து வைத்த பிரம்மச்சாரி திரும்பி வந்தார். “ஒரு முக்கியமான விஷயம். மழை வரும் போல இருக்கிறது. நீராடி விட்டு வருவதற்குள் மழை பிடித்துக் கொண்டால், கட்டுவதற்கு மாற்றுக் கோவணம் அடியேனிடத்தில் இல்லை.” உடனே அமர்நீதி நாயனார்,” ஐயனே! உம்மைப் போன்ற அடியார்களுக்குத் தருவதற்காகவே, ஆயிரம் ஆயிரம் ஆடைகளை நெய்து வைத்து இருக்கின்றேன். நீங்கள் கவலைப்படாமல் சென்று நீராடி விட்டு வாருங்கள். புத்தாடைகளை அடியேன் மகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறேன்.” பிரம்மச்சாரி சொன்னார்.
“நீர் தரும் ஆடைகள் எமக்குத் தேவையில்லை. நம்மிடமே மாற்று உடை உண்டு. இதோ இந்தத் தண்டத்தில் கட்டியுள்ள கோவணத்தை உம்மிடம் தருகின்றோம். நீர் இதைப் பாதுகாத்து, நான் நீராடிவிட்டு வந்தவுடன் தரவேண்டும்.” “அதற்கென்ன தாருங்கள். பாதுகாத்து உங்கள் விருப்பப்படி தருகின்றேன்” தண்டில் கட்டி இருந்த ஒரு கோவணத் துணியை அவிழ்த்து, அமர்நீதி நாயனாரிடம் தந்த பிரமச்சாரி அடுத்து சொன்னார்.
“இதோ பாரும். இது மிக முக்கியமான கோவணம். இதை அலட்சியமாக நீர் எங்கேனும் போட்டு விடக்கூடாது. பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் இதைத் தவிர வேறு எதையும் அணிவது இல்லை” என்று சொல்லிவிட்டு நீராடச் சென்றுவிட்டார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் வைத்தார்.சிவனடியாருக்காகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் சிவனடியார் மழையில் நனைந்தவராய் வந்தார்.“என் உடல் நடுங்குகிறது.விரைவாகச் சென்று எம் கோவணத்தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்.
இதோ ஒரு நொடியில் கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவணம் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். திரும்பத் திரும்பத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. சிவனடியாரோ,” இன்னுமா கொண்டு வரவில்லை…சீக்கிரம்… சீக்கிரம்..” என்று விடாது குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தந்த கோவணம் காணாததால், பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார்.
“அடிகளே!, என் போதாத காலம்.தாங்கள் தந்த கோவணத்தை பத்திரமாக வைத்திருந்தாலும் ,வைத்த இடத்தில் காணவில்லை. அதை யாரும் எடுக்கவில்லை.எல்லாம் பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. அடியேனது குற்றத்தைப் பொறுத்து இதனை அணிந்து அருளுங்கள்” என வேண்டினார்.இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார்.
“அமர்நீதியாரே! நன்றாக இருக்கிறது உங்கள் வணிகம்! அடியார்களுக்கு நல்ல கோவணம் கொடுப்பேன் என்று, உலகை நம்ப வைத்தது, என்னுடைய கோவணத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொள்வதற்காகத்தானோ! நன்றாக இருக்கிறது ஐயா, உம்முடைய நீதியும் ,சிவனடியார்களிடம் காட்டும் அன்பும்”
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்
சிவனடியாரின் சீற்றம் கண்டு அமர் நீதியார் நடுங்கினார். அவரைத் திரும்பத் திரும்ப விழுந்து வணங்கினார்.
“இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்” என்று கூறினார். சற்று நேரம் அவரை நடுங்க வைத்த சிவனடியார்,” சரி, போனது போயிற்று. அதைப் போன்ற இன்னொரு கோவணம் இந்தத் தண்டில் சுற்றி வைத்திருக்கிறேன். இதற்கு இணையான ஒரு கோவணம் உம்மிடம் இருந்தால் தரலாம் “அமர்நீதியாருக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. ஏதோ இந்த அளவில் சிவனடியார் ஏற்றுக்கொண்டாரே என்று நினைத்தவர், உடனே ஒரு பெரிய தராசு கொண்டுவந்து வைத்தார்.
சிவனடியார் தண்டில் கட்டியிருந்த நனைந்த கோவணத்தை வைத்தார். வைத்த தட்டு இறங்கியது. அமர்நீதியார் தம்மிடம் இருந்த விலை உயர்ந்த அழகான கோவணத்தை அடுத்த தட்டில் வைத்தார். ஆனால் என்ன வியப்பு! அந்தத் தட்டு இறங்கவே இல்லை. சிவனடியார் சிரித்தார். “நான்தான் இதற்கு இணையான கோவணமில்லை என்று சொல்கிறேனே” என்று சொன்னவுடன்,” ஐயனே! சற்று பொறுக்க வேண்டும்” என்று சொல்லி, தம்மிடமிருந்த பலப்பல ஆடைகளையும் அந்தத் தட்டில் வைத்தார். ஆனால், அப்போதும் தட்டு இறங்கவே இல்லை.
இது வரை நிம்மதியாக இருந்த அமர்நீதிநாயனாருக்கு இப்பொழுது முன்னிலும் பதற்றம் ஏற்பட்டது. இது ஏதோ விளையாட்டு போல் இருக்கிறது என்று நினைத்தவர், தம்மிடம் இருந்த அத்தனைத் துணிமணிகளையும் வைத்தார். தட்டு இறங்குவதாக இல்லை. அடுத்து, தம்மிடமிருந்த ஆபரணங்களையும், வைர வைடூரியங்களையு வைத்தார். தம்முடைய எல்லா செல்வங்களையும் தராசுத் தட்டில் வைத்தார். ஆனால் ஒரு அங்குலம் கூட இறங்காமல் அப்படியே நின்றது.
இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை! இனி எதை வைத்து அந்த கோவணத்திற்கு இணை செய்வது?திகைத்துப்போன அமர்நீதி நாயனார்,’ “ஐயனே! இனி என்னிடம் வைப்பதற்கு எதுவும் இல்லை. ஈசன் ஏதோ திருவிளையாடல் என் விஷயத்தில் நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெரிகிறது.” சிவனடியார் கேலி செய்தார்.
“என் கோவணத்திற்கு இணை வைக்கச்சொன்னால், நீ ஏதேதோ பேசுகிறாய். இனி என்ன இருக்கிறது உன்னிடம்?”
அமர்நீதி நாயனார் நடுங்கினார்.
“இனி வைப்பதற்கு அடியேனும், மனைவியும்,மகனும்
மட்டுமே இருக்கிறோம்.”
“பிறகென்ன?” என்றார் சிவனடியார்.
அடுத்த நிமிடம் தன்னுடைய மனைவியையும் மகனையும் அந்தத் தராசின் மீது ஏறி நிற்கச் சொல்லி,’ சிவாய நம” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே தானும் ஏறி நின்றார்.
இக்காட்சியை உணர்ச்சிப் பெருக்கோடு பாடுகிறார் சேக்கிழார்.
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்
நாயனார் ஏறியவுடன் தராசுத் தட்டு கீழே இறங்கி கோவணத்திற்குச் சமமாக நின்றது.
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரைக்
கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா
அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான்
“ஐயா திருப்திதானே?” என்று கேட்டார் அமர்நீதி நாயனார்.
“திருப்தி.. திருப்தி” என்று சொல்லிக்கொண்டே மறைந்து போனார் சிவனடியார். அடுத்த நொடி அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். “உன்னுடைய பக்தியைச் சோதிக்கவே யாம் சற்று விளையாடினோம். நீர் பரம பக்தர் என்பதை நிரூபித்து விட்டீர்.”அமர்நீதி நாயனார் அழுதார். கை கூப்பித் தொழுதார். கரம் சிரம் குவித்து ஆடினார். ஈசனின் அருள் நினைந்து பாடினார். எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே அந்தத் துலாக்கோல் ஒரு விமானமாக மாறி மேலே எழுந்தது.
நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்
அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோக வாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.
அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச்சிலையிலும் திருநல்லூர் திருத்தலத்தில் இன்றும் காணலாம்.இக்கதையில் ஒரு அருமையான நுட்பம் கவனிக்க வேண்டியிருக்கிறது. எத்தனைப் பொருட்களை வைத்தாலும் அவைகளெல்லாம் ஈசன் ஏற்றுக்கொள்வதில்லை. தன்னையே தான் என்று நினைக்கும் அகங்காரத்தைத் துறந்து, தான் அவன் பொருள் என்று நினைக்கும் பொழுது, அவன் அருள் ஒரு ஆன்மாவுக்கு பூரணமாக கிடைக்கிறது. அமர்நீதி நாயனாரின் அருட் கதை தரும் செய்தி இதுதான்.
நாதன்
