நடராஜப்பத்தின் அபூர்வ தத்துவ விளக்கம்

பகுதி 1

நடராஜர் பத்து (நடராஜப் பத்து) என்பது சிதம்பரம் தில்லைவாழ் நடராஜரின் மீது சிறுமணவூர் முனுசாமி முதலியாரால் இயற்றப்பட்ட பத்துப் பாடல்களைக் கொண்ட புகழ்பெற்ற பதிகமாகும். இது தினமும் பாராயணத்திற்குரிய மிகச் சிறந்த பக்திப் பாடலாகும். இது முழுக்க ஒரு பக்தனுடைய உணர்வு வளத்தையும் அதே நேரத்தில் பக்தனுடைய ஞானத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகிற ஒரு படைப்பு என்று.

தெளிந்த மனமுடைய ஒருவர்தான் அவர் ஏங்கி அடைய விரும்புகிற ஓர் உயர்வான பொருளைப் பற்றி சரியான கருத்தைக் கொண்டிருக்க முடியும்.அதே சமயம் ஒரு கனிந்த இதயம்தான் பக்திக்குப் பாத்திரமாகி அந்த உயர்ந்த பொருள் மீதான பக்திப்பிரவாகத்தை என்றைக்கும் உள்ளே சுமந்து இருக்க முடியும். அப்படியான நடராஜ பத்து பாடல்களை தன் தெளிவினாலும் பக்தியாலும் இயற்றியவர் சிறுமணவூர் முனுசாமி முதலியார்.அவருடைய பரந்துபட்ட ஞானம் இப்பாடல்களில் தெரிவது போல அவருடைய ஆழ்ந்த பக்தியுள்ளமும் தெரிகிறது.

1.விஸ்வரூப தரிசனம்

(The All-Encompassing Cosmic Form)
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலம் இரண்டேழு நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

இந்த மண்ணுக்கு ஆதியாக இருக்கக்கூடியதும் இந்த பூதங்களுக்கெல்லாம் ஆதியாக இருக்கக் கூடியதும் விண்ணுக்கும் ஆதியாக இருக்கக்கூடியதும், அண்டங்களுக்கெல்லாம் ஆதியாக இருக்கக்கூடியதாகும் பொருள் என அவர் தொடங்குவது ஒரு விஸ்வரூபக் காட்சியைக் காட்டுகிறது. மண்ணிலேயும் விண்ணிலேயும் உயர்ந்த பொருளாகக் கருதப்படக்கூடிய வேதங்களுக்கு வேதங் களின் அடிமுடியாகவும் இருக்கக்கூடிய பரம்பொருள் என விரிவுபடுத்துகிறார். தியானக்காட்சி காண்பதுபோல உள்ளது. அவருடைய பட்டியலில் பெரும்பொருள்கள் யாவும் வருகின்றன. மதி வருகிறது, ரவி வருகிறது. நீர்ப் புனல் வருகிறது, மண்டலம் ஈரேழும் வருகின்றன. அப்படியே இந்த படைப்பினுடைய தத்துவங்கள் எல்லாவற்றையும் அடுக்குகிறார்.

வேதம் வேதத்தின் ஆதி பாதம் கேசம் என அழகு உணர்வுகளையும், தத்துவத்தையும் கலந்து அவரால் சொல்ல முடிகிறது. எல்லாம் சொன்னபின் அந்த படைப்பினுடைய மூலத்தை பெரிதளவும் வியந்து சரியான முறையில் ஓர் அடுக்காக அமைத்துச் சொல்லி இறுதியில் தன்னுடைய ஞானத்தினுடைய ஒரு முடிவாக, ஞானத்தினுடைய ஒரு தீர்மானமாக ஞானத்தினுடைய இயலாமையாகக் கூட ஒரு பக்த மனநிலைக்கு உருமாறி விடுகிறார். பக்த உணர்வு நிலைக்கு மாறியபின், எளியனாக, சாமானியனாக என் குறைகள் எல்லாம் யாருக்குச் சொல்வேன் எனக்
கேட்டு நிற்கிறார்.

அப்படி அவர் யாரை நோக்கி வேண்டி நிற்கிறார்? சைவர்களுக்கு சிவலிங்கம் மிக மிக உயர்ந்தது. ஆனால் அந்த சிவலிங்க வடிவத்தை, அருவுருவான அந்தத் தத்துவ பிரகாசமான வடிவத்தை விடுத்து இவர் நடராஜரிடம் தன்னுடைய குறைகளை சொல்லுவது போல அமைத்திருக்கிறார். நடராஜர் உருவ வடிவிலான இறைப் பரம்பொருளே. அருவமும் கடந்த இறைப்பொருளை தத்துவமாகக் கருதிய அவரே, பக்தனாக தன் உள்ளத்திலிருந்து தத்துவத்தை உருவமாகக் கொண்ட அந்த நடராஜரிடம் இதைச் சொல்லுகிறார் என்பதே நானடையும் பெருவியப்பு.

2. ஆனந்தத் தாண்டவ வைபவம் (The Cosmic Dance of Ecstasy)

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிவலிங்கத்தின் தன்மைக்கும் தத்துவ குறியீட்டுக்கும் மாறாக, நடராஜரின் உருவத் தோற்றம் பக்தர்களை இறைவனுடன் இன்னும் நெருக்கமாக இணைக்கிறது என்பதென் கருத்து. நடராஜரின் முகம், உடல்மொழி என அனைத்தும் சட்டென என்னுள் ஒட்டிக்கொண்டு என் உணர்வுடன் தொடர்பு கொள்வதை என்னுள் பலமுறை கண்டிருக்கிறேன். அனைவருக்கும் அவரவர் குறைகளை ஒரு கனிந்த தோழனிடம் சொல்வது போல கொட்டித் தீர்க்கவும் இந்த பாவனா பலம் உதவுகிறது. இந்த பாவனை முனுசாமி பக்தரின் பக்தி மேலீட்டையும், அவருடைய உள்ளத்தின் ஆழத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

நடராஜ பத்தின் இரண்டாவது பகுதியை ஆனந்தத் தாண்டவ வைபவம் என்கிறார்கள். முதலில் நாம் பார்த்தது விஸ்வரூப தரிசனம். இது ஆனந்தத் தாண்டவம். பரம்பொருள் பெருங்களிப்புடன் தனது திருச்செயல்களை ஒரு சிறந்த நடனக்கலைஞன் நடன லயத்துடனும், அழகியலுடனும் ஆற்றுவதுபோல இருப்பதே நடராஜர் வடிவம். நடராஜரிடமிருந்து பிரிக்க முடியாததாக இருப்பது ஆனந்தத் தாண்டவம்தான்.

நடராஜரின் ஆனந்தத் தாண்டவம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை, அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிக்கும் ஒரு மகத்தான தத்துவ வெளிப்பாடு. இந்த ஆனந்தத் தாண்டவத்தில் அவர் தன் ஒரு காலை ஊன்றி, மறு காலைத் தூக்கி நின்ற நிலையானது, உலக உயிர்களுக்கு அருளக்கூடிய முக்தி, அதாவது பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுதலை அடைவதைக் குறிப்பதாகும்.

இந்த நூலாசிரியர் இந்த ஆட்டத்தின் ஆன்மிகச் சிறப்பை தன் பாடலில் வெளிப்படுத்தியது உள்ளத்தை என்னவெல்லாமோ செய்யும்.எல்லாமே ஆடுகின்றன. இதுவே அவருடைய பார்வை, அவர்கண்ட தரிசனம். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமாக உள்ளது அவருக்கு நடனமாகத் தெரிகின்றது. அவர் காண்கின்ற தத்துவங்கள் எல்லாமே ஓர் ஆட்டத்துக்கு உட்பட்டு ஏதோ ஒரு தாளத்தில், லயத்தில் சிக்குண்டுகட்டுண்டுள்ளன. மானாட மழுவாட மதியாட புனலாட என்கிறார். வானுலகுக் கூட்டம் எல்லாம் ஆட, எல்லாமே ஆடல் தான். நந்தி வாகனமாட, இந்த ஆட்டத்தோடு நீயும் ஆடிவந்து என்னைச் சேர். நந்தி வாகனத்தோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே என்றொரு பக்த மனநிலை இங்கேயும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

நான் முன்னமே சொன்னது போல ஒரு தெளிந்த ஞானம் உடையவருக்குத்தான் பக்தி சாத்தியமாகும். எந்த ஓர் அறிவு தன்னுடைய அறியாமையின் கோர முகத்தைக் காட்டி, தன்னால் அறிய முடியாத அளவுக்கு அது பெரியது என்கிற அறிவுறுத் தலைக் கொண்டிருக்கிறதோ அந்த உள்ளத்தில்தான் ஒரு பெரும் பணிவு அமையும். பின்தான் பக்தி உள்ளுக்குள் வரும். பக்தியோடு சரணாகதியும் சேர்ந்து வரும். சரணாகதி வந்த பிறகு இன்னும் வந்து என்ன கூப்பிடலையேப்பா, இன்னும் என் முன்னாடி நீ வரலையேப்பா இன்னும் என்னை காப்பாத்தலையேப்பா என்கிற கேவல் சேர்ந்து வரும். அதை இந்த இரண்டாவது ஆனந்தத் தாண்டவ வைபவத்தில் நன்றாக உணர முடிகிறது.

ஆண்டவனின் ஆனந்தத் தாண்டவத்தின் முன் நிற்கும்போது, ஒரு பக்தனின் உள்ளத்தில் ஏற்படும் அந்தப் பணிவும், சரணாகதியும்தான் உண்மையான ஆன்மிகத்தின் உச்சக்கட்டம். பேரறிவின் முன்னால் நம் அறியாமையை உணர்ந்து, இறைவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போது, அந்த ஏக்கமும், அந்தத் துடிப்பும் அழும் குழந்தை ஒன்றை இறைவனை அழைத்துப் பேசுவது போன்ற ஒரு உளநிலையை உருவாக்குகிறது. இந்தப் பாடல்கள் இந்த நுட்பமான மனநிலையை எவ்வளவு அற்புதமாகப் பதிவு செய்கின்றன?

3.சம்சார மாயை

(Breaking Free from the Whirlwind of Desires)
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டு உண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனும் அடைந்திலேனை
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாவரம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்
தடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
இருப்பதுனக்கழகாகுமா?
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

மூன்றாவது பகுதி சம்சார மாயை பற்றிச் சொல்கிறது. நடராஜருடைய தரிசனத்தை நேரில் எதிர்பார்க்கின்ற முனுசாமி அவர்கள் ஏன் தனக்கு தரிசனம் வாய்க்கவில்லை? எது வந்து என்னைத் தடுக்கிறது? போன்ற சிந்தனை உடையவராகத்தான் இருந்திருக்க வேண்டும். தத்துவத்தை தொடர்ந்து ஆய்ந்தறிந்த அவரின் பெரும் தெளிவின் உதவியால் தன்னால் இறைவனை இன்னும் காண முடியாததற்குக் காரணம் என்ன என்று அறிந்துள்ளார். இந்த உலகம் இந்த சம்சார மாயை அதில் சிக்கியுள்ளோமே, பரம்பொருளை அடைய முடியவில்லையே என்கிற அவருடைய அறிதலினால் அவர் கொண்ட சங்கடம் அது. அவரின் அயர்ச்சி, சலிப்பு, வேதனை, விரக்தி மனநிலை யாவும் இப்பாடலில் தெரிகின்றன.

கட்டுண்டு நித்தம் நித்தம் என்கிறார். இந்த உடல் என்கிற கும்பிக்கு உணவெனும் இரை தேடி இப்படி இரவு பகல் ஓயாம ஓடிட்டு இருக்கேனே! உண்டு உறங்குவது தவிர்த்து என்ன செய்கிறேன், ஒரு பயனும் இல்லையே, உன்னைக் காண்கிற பயன் இல்லையே! இந்த மாயையிலிருந்து என்னைமீட்டிடய்யா என்றவர் புலம்பல் இதயத்தைப் பிசைகிறது. அவர் தனக்குள் கண்ட இவ்வாழ்க்கையினுடைய போக்கைப் பார்த்து, அந்தத் தெளிவுடன் மனத்தைப் பணிவாக்கி மீண்டும் தில்லைவாழ் நடராஜரை எதிர்நோக்குகிறார்.

தனக்கு மீட்பு வந்து சேர வேண்டும் என்று. சம்சார மாயையின் பிடியில் சிக்கிய மனித வாழ்க்கையின் பெரும் சுமையை இப்பாடல் உணர்த்துகிறது. இந்த நூலாசிரியர் இந்தச் சலிப்பினை வெளிப்படுத்தி, உண்மையான ஆன்மிகத் தேடலின் அவசியத்தை உணர்த்துகிறார். உலகியல் பற்றுகளில் இருந்து விடுபட, தில்லைவாழ் நடராஜரின் அருளை நாடி, முழுமையான சரணாகதியை மேற்கொள் வதுதான் ஆன்மிக விடுதலைக்கான ஒரே வழி என்பதை அவரது வரிகள் ஆழமாகப் பேசுகின்றன.

4. சித்தர் நெறியும் பாதக் கமலமும்

(The Path of the Siddhas vs. Divine Feet)
பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்
கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனம் உன்னடிவிட்டு அகலாது நிலைநிற்க
ஏது புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிரமத்தை மட்டும் நான் அனுபவிக்கிறேன் நீ கொடுத்த இந்த வாழ்வே மோசம், இந்த பூமியே தீமையானது, கடினமானது என்றவர் சொல்லி நிற்கவில்லை. எனக்கு வேறு சில உயர்ந்த பரிசுகள் கிடைத்துள்ளன. ஆனால் அவையல்ல எனக்கு வேண்டியவை என்பதே இந்த நான்காவது பாடல். வம்பு சூனியம் அல்ல வைப்பல்ல மாரணம் பகர் வசிய தம்பனம் பாதாள வஞ்சனம் பரகாய பிரவேசம் ஜாலமல்ல என்கிறார். இந்த சித்தியெல்லாம் வைத்திருப்பது ஒரு மதிப்பே.

ஆகமங்களிலும், யோக சூத்திரங்களிலும் சக்தி வெளிப்பாடுகளாக சித்திகளைப் பேசுகின்றனர். யாருக்கும் எளிதில் கிடைக்காத, தபஸ்விகளுக்கே இறைவன் அருளாய், இறைப் பரிசாய் வந்து சேருகிற இது மாதிரியான ஆற்றல்கள் அல்ல நான் வேண்டுவது. என்னுடைய தவத்திறமையை உலகுக்கு வெளிப்படுத்தக்கூடிய வகையில் என்னுடைய தன்மை மாறி இருப்பதன்று நான் வேண்டுவது என்கிறார். அவையெல்லாம் எனக்கு வேண்டாம் நீதான் வேண்டும்.

இந்த மாய உலகத்தில் நான் அவதிப்பட்டு உண்டுறங்கி மட்டுமே வாழ்ந்திருந்த சூழலிலும் நீதான் வேண்டும். உன்னுடைய பரிசுகளால் நான் திறன் படைத்தவனாக, மனிதக் கூட்டத்திலேயே தனித்து இருக்கக் கூடியவனாக சித்தி பெற்றவனாக இருந்தாலும் நான் வேண்டுவது உன்னோடு இரண்டறக் கலத்தல்தான். இந்த சித்திகளின் பலனாக வருகிற சிறிய மயக்கத்தை நீக்கி எனக்கு நீ மட்டுமே வேண்டுமென்கிற அந்த இச்சையை என்னிடமிருந்து நீக்கிவிடாதே என இறைஞ்சுகிறார். எது நான் பெறினும் உன் திருவடி நினைவு நீங்கா வண்ணம் என் நெஞ்சிருக்க வேண்டும்
என்கிற பக்தனை எப்படி இறைவன் ஏற்காமலிருப்பார்?

5. பக்தி உரிமை (Filial Boldness and Claiming Grace)

நொந்துவந்தே னென்று ஆயிரம்
சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!

நுட்பநெறியறியாத பிள்ளையைப்
பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளை
யில்லையோ
தந்தை நீ மலடுதானோ!

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே
புகழுதே

வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

ஐந்தாவது பகுதி பக்தியைச் சொல்கிற பாடல். நுட்ப நெறி அறியாத பிள்ளையைப் பெற்று நோக்காத தந்தையும் உண்டோ? எனக் கேட்கிறார். நீதானே பெற்றாய்? நான் சிறிது அப்படி இப்படி இருந்து விட்டேன். அதனாலென்ன? நீ என்னை விட்டிடலாமா? எல்லாம் உன்னை புகழ்கின்றனவே, நீ பெரியவன் என்கிறார்களே? நீ என்னை ஆட்கொள்ளவில்லையெனில் யார் கொள்வார்? இது என்ன கோலம்?

ஏன் இப்படி என்னை விட்டு வைத்துள்ளாய்? ஏன் எனக்கு இப்படி ஒரு பிறப்பை முன்னர் கொடுத்தாய்? நீ வருவதாகத் தெரியவில்லை, ஆனால் நான் உன்னை விடுவதாகவும் தெரியவில்லை என ஒரு தகப்பனிடம் எவ்வளவு மரியாதை இருப்பினும் ஒரு இக்கட்டான சூழலில் உரிமை கொண்ட பிள்ளை தொடர்ந்து மன்றாடி அரற்றுவது போல உரிமையோடு பக்தியோடு இங்கு மொழிகிறார்.ஒரு சிறந்த சீடன் குருவிடம் வாதாடுவது போல வழக்காடுவது போல இப்பாடல் அமைந்திருக்கிறது. பக்த உள்ளத்துக்கே உள்ள சலுகையிது. இவ்வாறு கோபிக்க கோபிக்க இறைவனை நெருங்கவைக்கும் இது.

(தாண்டவம் தொடரும்)

மெய்யோகம் ரகுராம்

Related Stories: