சென்னையில் வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

சென்னை: சென்னையில், அமைந்தகரை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது ஏர்கன்னை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஐயப்பக்கத்தை சேர்ந்தவர் ஜான் பாஸ்கோ (59) இவரது மனைவி அனுராதா, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அனுராதா அவர்களது மகன்களுடன் அமைந்தகரை பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜான் பாஸ்கோ அவரது மகன்களை பார்க்க மனைவி தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கும், அவர் மனைவிக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் வாக்குவாதம் முற்றியதால் கோபத்தின் உச்சியில் அந்த நபர் தனது ஏர் கண் (Air Gun) துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பயங்கர துப்பாக்கி சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பெரும் அலறியடித்துக் கொண்டு அச்சமடைந்தனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அமைந்தகரை காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த நபரிடமிருந்து ஏர்கன் மற்றும் 180 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த ஏர்கன் பெரியமேட்டில் ரூ.3,500-க்கு வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Related Stories: