நிபுணர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவ கல்லூரியில் முதுநிலை டிப்ளமோ படிப்பு ரத்து : தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: மருத்துவக் கல்வியில் தரத்தை உயர்த்தும் நோக்கில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக முதுநிலை டிப்ளமோ படிப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது அத்துறைகளில் போதுமான எண்ணிக்கையில் முதுநிலை பட்டம் பெற்ற நிபுணர்கள் இருப்பதால், இந்த டிப்ளமோ படிப்புகள் அதன் முக்கியத்துவத்தை இழந்துள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் கருதுகிறது.

மேலும், பல கல்லூரிகளில் ஒரே பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்ட மேற்படிப்புகள் வழங்கப்படுவதையும் ஒழுங்குபடுத்த நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வரும் 2026-27ம் கல்வியாண்டுடன் முழுமையாக ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், தற்போது செயல்பாட்டில் உள்ள டிப்ளமோ இடங்களை எம்.டி., அல்லது எம்.எஸ்., போன்ற பட்ட மேற்படிப்பு இடங்களாக மாற்றிக் கொள்ளுமாறு அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிர்ணய வாரியத்திடம் கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், கண் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்போதுள்ள சுமார் 400 டிப்ளமோ இடங்கள் பட்ட மேற்படிப்பு இடங்களாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளை கொண்டு கூடுதல் பட்டதாரி மருத்துவர்களை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிர்ணய வாரியத்தின் தலைவர் பேராசிரியர் எம்.கே. ரமேஷ் கூறுகையில், ‘டிப்ளமோ முடித்தவர்கள் எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறுவதிலும், கற்பித்தல் பணிகளில் சேருவதிலும் பெரும் சவால்களை சந்திக்கின்றனர். எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் பின்தங்கியே உள்ளனர்.

முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை 2023ம் விதிகளின்படி, புதிய டிப்ளமோ இடங்களுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படாது. இந்த மாற்றத்தின் மூலம் மருத்துவ மேற்படிப்புகள் அனைத்தும் ஒரே சீரான தரத்திற்கு கொண்டு வரப்படும்’ என்று தெரிவித்தார். மருத்துவக் கல்வியின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த வகுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட உயரிய பட்டங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: