எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அயன்ராசாபட்டியில் சிவகாசியை தலைமையிடமாகக் கொண்ட பாலாஜி பயரோ டெக் என்ற நிறுவனத்தின் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடிமருந்துகள் உரசியதால் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா, நத்தத்துப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமியின் மனைவி மாரியம்மாள் (48) தலை சிதறி பலியானார். படுகாயத்துடன் 28 பேர் மீட்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்குப் போராடும் மூவர் உள்பட 8 பேர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
