இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; 2வது டெஸ்டில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு; 2 முக்கிய விக்கெட் எடுத்து ஹென்ரி அசத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய பவுலிங் ஆல்ரவுண்டர் ஜேமிசன் 41 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் 36 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் அளித்தார். பெத்தேல் 9 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியைப் போல இப்போட்டியிலும் எமிலியோ கே அரைசதம் அடித்து அவுட்டானார்.

இதன்பின்னர் ஜோடி சேர்ந்த தற்காலிக கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை மீட்டனர். ஆனால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய பந்தில் ஜோ ரூட் (46 ரன்கள்) மற்றும் ஹாரி புரூக் (24 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 222 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஓ ரூர்க்கி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து அணியை விட இங்கிலாந்து அணி 169 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் மீதம் உள்ள 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்கள் விரைவில் எடுக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related Stories: