சென்னை: சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் அதிவேக ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியத்தின் சார்பில், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (என்எப்டிசி) இணைந்து நடத்தும் 3டி அனிமேஷன் மற்றும் விசுவல் எபெக்ட் தொடர்பான நீண்டகால, தங்குமிடமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா நேற்று பல்லாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கன்டோன்மென்ட் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு, பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய இளைஞர்கள் சாதனை படைத்து வருகின்றன. எக்ஸ்பிரஸ் சாலைகள், நவீன விமான நிலையங்கள், வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளன. மும்பை – அகமதாபாத் இடையேயான நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். சென்னை – பெங்களூரு, சென்னை – ஐதராபாத் உள்ளிட்ட வழித்தடங்களிலும், அதிவேக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடாக மாற்றும் நோக்கில், மாணவர்கள் இந்த ஏவிஜிசி இலவச பயிற்சி திட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்தி, உலகளாவிய நிறுவனங்களில் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வில் கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
