ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்பே தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆளுநர் உரையில் கூறி இருப்பதாவது:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த அரசின் முதன்மை கொள்கையாகும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உடனடி நிதி உதவிகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மட்டுமின்றி, முறையான நீர்ப்பாசன மேலாண்மை, நவீன விவசாய தொழில்நுட்பங்கள், குளிர்பதன கிடங்கு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் நலன்களை காக்கும் முதன்மை சக்தியாக அரசு செயல்படும். அனைத்து துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். முறையற்ற நிதிப் பரிமாற்றங்களும், இடைத்தரகர்களின் தலையீடுகளும் முற்றிலும் ஒழிக்கப்படும்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படை கொள்கை. இந்த கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்மொழியை வழக்காடும் மொழியாக பயன்படுத்தவும், உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்கவும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: