சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை

தமிழகத்தில் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பகல் நேரத்திலும் தொடர்மழை பெய்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. ஆலம்பூண்டி, அப்பம்பட்டு, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளிமலை, கரியாலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்தது. உக்கடம், டவுன் ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது.

Related Stories: