கோவை: கோவை – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பாஜக நிர்வாகி ஒருவர் காயமடைந்துள்ளார்.
சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வசூர் செட்டியார் பேருந்து நிறுத்தம் அருகே காரியகவுண்டன்பாளையம் செல்லும் குறுக்கு வழி பாதையில், கோவையிலிருந்து – சத்தியை நோக்கி வந்த எர்டிகா காரும் எதிரே வந்த டொயோட்டா இன்னோவா காரும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாக்கியது.
இந்த விபத்தில் சிக்கி சேதமடைந்த கார்களில் இருந்த அனைவரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் கோவையிலிருந்து சத்தியமங்கலம் திரும்பிக் கொண்டிருந்த திம்மையூர் பகுதியை சேர்ந்த விக்ரம், பதீஸ், பழனி மற்றும் பரசுராம் ஆகிய நால்வரில், பழனி மற்றும் பரசுராம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் விக்ரம் ,மற்றும் பதீஸ் அன்னூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்னோவா காரில் பயணித்த கோவை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் கரு. மாரிமுத்து மற்றும் அவருடன் பயணித்த சிலர் காயம் ஏற்பட்டதை அடுத்து திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்துக்குள்ளான எர்டிகா காரில் இருந்த சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்களை நெடுஞ்சாலை துறை போலீசார் மீட்டு, விக்ரமின் குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
