சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.75000 வரை கடன் வாங்கிய சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கும் கூடுதலாக வாங்கிய விவசாயிகளின் கடனில் ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கூடுதலாக 21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, நபார்ட் வங்கி ஆகியவற்றின் விதிகளை காரணம் காட்டி உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது நியாயமல்ல.
மராட்டிய மாநிலத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டிலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
