ஆரணியில் பிறந்தநாள் கொண்டாட்டம்; ஓட்டலில் சாப்பிட்ட தந்தூரியில் புழுக்கள்: தந்தை, மகனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

 

ஆரணி, ஜூன் 15: ஆரணியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட சிக்கன் தந்தூரியில் புழுக்கள் இருந்துள்ளது. இதை சாப்பிட்ட தந்தை, மகனுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் ஊராட்சி பொன்னிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(34). இவரது மகன் விஷ்ணு. இவருக்கு நேற்றுமுன்தினம் பிறந்தநாள். இதனால் சந்தோஷ்குமார் நேற்றுமுன்தினம் இரவு தனது மனைவி சரண்யா, மகன் விஷ்ணு மற்றும் மகளுடன் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு அசைவ ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அங்கு அனைவரும் தங்களுக்கு பிடித்த சிக்கன் தந்தூரி, ஆட்டுக்கால் பாயா, பரோட்டா உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது சந்தோஷ்குமாரும், விஷ்ணுவும் சாப்பிட்ட சிக்கன் தந்தூரியில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதற்கிடையே விஷ்ணுவுக்கும், சந்தோஷ்குமாருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவருக்கும் வயிற்றுபோக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விஷ்ணு தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆரணி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஆரணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது புழுக்கள் இருந்த சிக்கன் தந்தூரியை சாப்பிட்ட தந்தை, மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணியில் உள்ள ஓட்டல்களில் காடை, சிக்கன் தந்தூரி, இறால் போன்ற அசைவ உணவுகளில் புழுக்கள், கரப்பான் பூச்சி இருப்பது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து கேட்டால், ஆட்களை வைத்து மிரட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அதேபோல் நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாலும், முறையாக ஆய்வு செய்வதில்லையாம். ஓட்டல் உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லையாம். எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல்களில் முறையாக சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Related Stories: