தண்டராம்பட்டு, ஜூன் 6: தண்டராம்பட்டு அருகே கிராம சபை கூட்டத்தில் மதுபோதையில் ஊராட்சி செயலாளரை கீழேதள்ளி தாக்கிய தூய்மை பணியாளர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வீரணம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் மண்டல துணை பிடிஓ வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சிவராஜ் பஞ்சாயத்து வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த தூய்மை பணியாளர் சக்தி(48) என்பவர், தனக்கு 2 மாத சம்பள பிடித்தம் தொகை போடாமல், வெறும் மாதம் ரூ.5000 மட்டுமே போட்டுள்ளனர்.
மீதமுள்ள பணம் எப்பொழுது போடுவீர்கள் என்று கேட்டு ஊராட்சி செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி தாக்கினாராம். உடனே அங்கிருந்தவர்கள் துப்புரவு பணியாளரை தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சிவராஜ், சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளரை, தூய்மை பணியாளர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
