நெல்லிக்குப்பம்: நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது எஸ்பி அதிவிரைவு படை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பி.என். பாளையம் பெருமாள் நகரை சேர்ந்தவர் சிவா மகன் சுரேஷ்பாபு(29). இவரது வீட்டில் கடந்த மாதம் 26ம் தேதி ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் பணம் மற்றும் ஒன்றரை பவுன் நகைகள் திருடுபோனது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சுரேஷ்பாபு வீட்டின் மீது மர்ம ஆசாமிகள் கல் வீசியுள்ளனர். வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லை. மீண்டும் வீட்டுக்குள் சென்றதும் கல் வீசியுள்ளனர். இதேபோன்று, அருகில் உள்ள வீடுகளின் மீதும் கல் வீசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சுரேஷ்பாபு வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
தற்போது, வீட்டின் மீது கல்வீசி அச்சுறுத்தி வருகின்றனர் என கூறி கடலூர்-பண்ருட்டி சாலை மேல்பட்டாம்பாக்கம் மெயின் ரோட்டில் இரவு 11.30 மணியளவில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறும், காலையில் பேசிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.
ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஜெயக்குமார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இருப்பினும், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, எஸ்பி அதிவிரைவு படை போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
