முதல்வராக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு ஒடிசாவில் கேஜி முதல் பிஜி வரை இலவச படிப்பு: மாநில பாஜ அரசு அறிவிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் மழலையர் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என மாநில பாஜ அரசு அறிவித்துள்ளது. ஒடிசா சட்டப்பேரவைக்கு கடந்த 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 78 இடங்களை வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அங்கு 24 ஆண்டுகால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது. ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி 2024 ஜூன் 12ம் தேதி பதவி ஏற்றார்.

அவர் பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில் முதல்வர் மோகன் சரண் மாஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கல்வியை உண்மையாகவே இலவசமாகவும், அனைவருக்கும் கிடைக்க கூடியதாகவும் மாற்றும் வகையில், ஒடிசாவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் மழலையர் வகுப்பு முதல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். இந்த நடவடிக்கை மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு பெரிதும் பயனளிக்கும். நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசாவில் மழலையர் வகுப்பு (கேஜி) முதல் முதுகலை(பிஜி) வரையிலான இலவச கல்வியை அமல்படுத்த உள்ளது” என கூறினார்.

Related Stories: