பிரளய காலத்தில் சிவபெருமான் உலகைப் படைக்க நான்கு வேதங்களும் இத்தலத்தில் சிவபெருமானை வேண்டி தேவர்களும் முனிவர்களும் வேதங்கள் ஓதியதால் திருவோத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, பின்னாளில் திருவத்திபுரம் என்றும், செய்யாறு என்றும் அழைக்கப்படுகிறது.
தட்சன் மிகப் பெரிய வேள்வி ஒன்றை நடத்துகிறார். அந்த வேள்வியில் தனது மருமகனான சிவபெருமானை அழைக்காமல் நடத்துகிறார்.
தன் தந்தை கணவரான சிவபெருமானை அழைக்கவில்லை என்ற கோபத்துடன் வேள்விக்குச் செல்கிறார் பார்வதி தேவி. சிவபெருமான் ‘நீ அங்கு செல்ல வேண்டாம்’ எனத் தடுத்தும் அங்கு செல்கிறாள். அங்கு தன் தந்தை தட்சனிடம் வாதம் செய்கிறாள் பார்வதி தேவி. பின்னர் கோபம் தாங்காமல் அந்த வேள்வியின் தீயில் இறங்கி தீக்கிரையாகிறாள் பார்வதி தேவி. பின்னர், மீண்டும் குழந்தையாக பிறந்து சிவபெருமானை நினைத்து தவமிருந்து சிவபெருமானை மணந்தாள்.
திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருத்தலமாகும். இவ்வூரில் சிவபக்தர் ஒருவர் வளர்த்த பனை மரங்கள் அனைத்தும் ஆண் பனைகளாக இருந்ததால் அவரை சிலர் ஏளனம் செய்தனர். அவரின் துயரத்தை அறிந்த திருஞானசம்பந்தர் வேதபுரீஸ்வரரை பாடி தேவாரப் பதிகம் அருளினார். இறைவனின் திருவருளால் அந்த ஆண் பனைகள் பெண் பனைகளாக மாறி காய்க்கத் தொடங்கின.
இத்தலத்திற்கு பனை மரமே தலவிருட்சமாக உள்ளது சிறப்பாகும். இங்கு நாகலிங்கம் இருப்பதால் அவரை வழிபட நாகதோஷம் விலகும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும். இங்குள்ள சுவாமி வேதபுரீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். உடனுறை அம்பாள் மங்கை பருவத்தில் திருமணக் கோலத்தில் இளமுலையம்பிகை அருள் செய்கிறாள்.
இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், வியாழன், சனி, சுக்ரன், கேது ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.
*பௌர்ணமி நாளில் பஞ்ச நதியில் நீராடி வடக்கு நோக்கி புனர்பூசம் நட்சத்திர நாளில் சுவாமிக்கு அறுகம்புல் மாலை கொடுத்து நெல் நைவேத்தியம் செய்து சுவாமியை வழிபட்டால் நன்றாக படிப்பார்கள், தேர்வில் வெற்றி பெறுவார்கள்..
*அனுஷ நட்சத்திர நாளில் வெள்ளை சோளத்தை நிவேதனம்செய்து பசுவிற்கு உணவு கொடுத்தால் திருமணத் தடை நீங்கும்.
*புனர்பூச நட்சத்திரம் அல்லது பூரட்டாதி நட்சத்திரமும் வியாழக் கிழமையும் வரும் நாளில், தூங்கும் பொழுது தலைக்கு அருகே ஒரு பாத்திரத்தில் பால் வைத்து உறங்கி காலை எழுந்ததும் அந்தப் பாலை இந்த கோயிலின் ஸ்தல விருட்சமான பனை மரத்திற்கு பால் ஊற்றி மஞ்சள் நிற பட்டு நூலால் பனை மரத்திற்கு தொட்டில் கட்டி வழிபட்டு வந்தால் பிள்ளைப் பேறு உண்டாகும்.
*திருவாதிரை நட்சத்திர நாளில் நாட்டுச் சர்க்கரையில் பிள்ளையார் பிடித்து 48நாள் வீட்டில் வழிபட்டு இந்த ஸ்தலத்திற்கு வந்து சுவாமியை வழிபட்டு பின் இங்குள்ள தீர்த்தத்தில் விட்டு வந்தால் பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வார்கள். இந்த வழிபாட்டை செய்யும் நாங்கள் ஒன்று சேர வேண்டும் என பிரார்த்தனை வைத்துக் கொள்வது சிறப்பு.
எப்படிச் செல்வது? சென்னை – வந்தவாசி (வழி- செய்யாறு), சென்னை திருவண்ணாமலை (வழி- காஞ்சி செய்யாறு) மார்க்கமாக செய்யாறு வந்து கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
