சென்னையில் திருட்டு வழக்குகளில் சிக்கியவர்; ஆண் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட டிஎஸ்பி சீருடையில் வந்த இளம்பெண்: வேலூர் கோட்டை மைதானத்தில் பரபரப்பு

 

வேலூர்:: ஆண் நண்பருக்கு பிறந்தநாள் கொண்டாட டிஎஸ்பி சீருடை அணிந்து கொண்டு வந்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் கோட்டை பூங்காவில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அதிகளவு இருப்பார்கள். நேற்று மாலை பூங்காவில் இளம்பெண் ஒருவர் டிஎஸ்பி சீருடையில் வந்தார். அவர் அங்கும் இங்குமாக ஒய்யார நடை போட்டு கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், சந்தேகமடைந்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், தனது ஆண் நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாட வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33). இவரது கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உமாமகேஸ்வரி 10ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவர் பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: உமாமகேஸ்வரி சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தங்கி ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்துள்ளார். அப்போது அங்கு நகை திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சென்னையில் வசிக்கும் இவரது உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரை நலம் விசாரிக்க சென்றபோது அங்கும் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாகவும் அங்கு போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சொந்த ஊரில் இருந்து டிஎஸ்பி சீருடை அணிந்து கொண்டு பஸ்சில் வேலூருக்கு வந்துள்ளார். பின்னர் தனது ஆண் நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் கோட்டை பூங்காவில் கேக் வெட்டி கொண்டாட வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய ஆண் நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவருக்கு பிறந்த நாள் என்பதும் அவர் கேக் வெட்டி கொண்டாட வரவில்ைல என்பதும் தெரிந்தது. ஆனால் டிஎஸ்பி சீருடையில் மகேஸ்வரி வந்தது ஏன் என்பது குறித்து கேட்டால் சரியான பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மகேஸ்வரியின் கணவரை வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: