கூடலூர்: விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் 2 காட்டு யானைகளை விரட்டாமல் வனத்துறையினர் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த குனில் வயல், ஏச்சம் வயல் பகுதிகளுக்கு முதுமலை வனத்தில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் தொடர்ந்து 1 வாரத்துக்கு மேலாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து காப்பி, பாக்கு மற்றும் நெல் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குனில்வயல் பகுதியில் உள்ள ஆற்றின் வழியாக இந்த யானைகள் ஊருக்குள் வர துவங்கி உள்ளது. இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகள் காலை விடிந்தும் வயல்வெளிகளில் நடமாடுகின்றன.
யானைகள் நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட முடியாத அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அவற்றை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவதில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யானைகள் ஊருக்குள் நுழையும் பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
