நெய்வேலி மின்விநியோக இணைப்பு டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் புதுச்சேரி நகரம் இருளில் மூழ்கியது

 

புதுச்சேரி: கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்சாரம், புதுச்சேரி, வில்லியனூர் தொண்டமாநத்தம் வழியாக உயரழுத்த மின்கம்பிகள் வழியாக மின் துணைநிலையம் வந்து, அங்கிருந்து மரப்பாலம், வெங்கட்டாநகர் உள்ளிட்ட அந்தந்த துணை மின்நிலையங்கள் மூலம் மின்விநியோகம் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் வில்லியனூர் துணை மின்நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் நேற்றிரவு 8.45 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் புதுச்சேரி நகரம், கிராமப்புறம் முழுவதும் மின்விநியோகம் முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து மின்பழுதை சரிபார்க்கும் பணியில் மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் ஒருசில லைன்களை மட்டுமே உடனடியாக சரிசெய்து மின்விநியோகம் அளிக்க முடிந்தது. மின்பழுதை முழுமையாக சீராக்கப்படும் வரையில், சுழற்சி முறையில் மின்விநியோகம் மாற்றி விடப்பட்டது.

இதனால் உருளையன்பேட்ைட, சாரம், உப்பளம், முதலியார்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது. இதேபோல் கிராமப்புறங்களும் 2 மணி நேரமாக இருளில் மூழ்கின. அதன்பிறகு படிப்படியான மின்விநியோகம் சீரானது.

Related Stories: