தொடர் மின்வெட்டு காரணமாக 1 லட்சம் ஏக்கர் நெல், பருத்தி கருகும் அபாயம்: தஞ்சை, திருவாரூர் விவசாயிகள் கவலை

 

தஞ்சை: தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் நெல், பருத்தி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் சாகுபடி நடைபெறும். பம்புசெட் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடியும் மேற்கொள்வார்கள். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தற்போது 15 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி நடைபெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை நெல் அறுவடை நடந்து வருகிறது.

இந்நிலையில் விழுதியூர், இரும்புத்தலை, மணக்குடி, முனியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடையால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் வயல்கள் வெடித்து பாளம் பாளமாக உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் குறைந்த மின்னழுத்தத்தால் பல இடங்களில் மின்மோட்டார்கள் பழுதாகி உள்ளது. இதன் காரணமாகவும் தண்ணீர் பாய்ச்சுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை, பகல் 12 மணி முதல் 1 மணி வரை, இரவு 10 மணி முதல் 12 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவோம். ஆனால் இப்போது இந்த நேரங்களில்தான் அதிக மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. 15,000 ஏக்கர் நெற்பயிரும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தமிழக அரசு, பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. அதை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், மின்வெட்டும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40,000 ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி நடந்துள்ளது. இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது ஒரு மாத பயிர்களாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் மின் வெட்டு கரணமாக இந்த பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பயிர்கள் முற்றிலும் கருகி விட்டது. குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட ஒன்றியங்களில் இந்த நிலை இருந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதுமட்டுமின்றி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரும் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

Related Stories: