சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்; சிங்கப்பெண் திட்ட காவலர்களிடம் சீருடைக்கு ரூ.2,300 கட்டாய வசூல்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முதல்வர் விஜய் இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் இணைந்த பெண் காவலர்களிடம் புதிய சீருடைக்கான ரூ.2,300ஐ கட்டாயமாக வசூலித்துள்ளனர். இதனால் புதிய திட்டத்தில் ஏன் சேர்ந்தோம் என்று பெண் காவலர்கள் புலம்பி வருகின்றனர்.

சிங்கப்பெண் திட்டம் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் இன்று தான் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. திட்டத்தின் முதல் பெண் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள், 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரால் நிச்சயம் தடுக்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் கூடுதலாக 2 எஸ்ஐக்கள் மற்றும் 18 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு என தனி சீருடைகளும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு ‘நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பெண் காவலர்கள் உள்பட அனைவரிடமும் புதிய சீருடைக்கான கட்டணமாக ரூ.2,300 பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதை விட கொடுமை என்னவென்றால், புதிய பெல்ட் வேண்டும் என்றால் ரூ.400ம், புதிய ஷூ வேண்டும் என்றால் ரூ.1000 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் சிங்கப்பெண் சிறப்பு திட்டத்தில் சேர்ந்த பெண் காவலர்களிடம் கட்டாயம் பணம் வசூலித்துள்ளனர்.

பொதுவாக புதிய திட்டம் தொடங்கினால் அதற்கான அனைத்து சீருடைகளும் காவல்துறை சார்பிலேயே வழங்கப்படும். அப்படி தான் இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. அந்த நடைமுறைக்கு எதிராக புதிய திட்டத்தில் சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண் காலவர்களிடையே சீருடைக்கான பணத்தை கட்டாயமாக வசூலித்துள்ளது போலீசாரிடையே பெரும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம் என்று நினைத்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சேர்ந்த பெண் காவலர்கள் தற்போது ஏன் இந்த திட்டத்தில் சேர்ந்தோம் என்று புலம்பி வருகின்றனர். எனவே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை இன்று தொடங்கும் முதல்வர் விஜய் திட்டத்திற்கான சீருடைகள் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: