சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகனுக்கு எதிராக ஏப்ரல் 2025 முதல் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உள்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்த்தி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குடும்ப நல நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ரவி மோகன் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணை வந்தது. அப்போது ஆர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ரவி மோகனின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு ரவி மோகனுக்கு உத்தரவிட்டார்.
