புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 மக்களவை எம்பிக்கள் மோடி அரசுக்கு ஆதரவு தருவதற்கு முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜிக்கு எதிராக கலகம் ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 60 பேர் தனி அணியாக இயங்க துவங்கி உள்ளனர். இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், தேர்தல் தோல்விக்கு அபிஷேக் பானர்ஜியின் தலைமையே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி சுகேந்து சேகர் ராய், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பை முறித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளர். கடந்த ஒரு ஆண்டாக கட்சி தலைமையிடம் இருந்து விலகியே இருந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ஜி கர் மருத்துவமனை பாலியல் வன்கொமை மற்றும் கொலை வழக்கை திரிணாமுல் காங்கிரஸ் கையாண்ட விதம் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் தோல்வியின் காரணமாக கட்சிக்குள் ஆழமான பிளவு ஏற்பட்டு நாடாளுமன்றத்திற்குள்ளும் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில் திரிணாமுல் காங்கிரசின் மூத்த மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் முதல் நபராக விலகினார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். இது குறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மாநிலங்களவை உறுப்பினரான சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா மாநிலங்களவை தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் கூறுகையில், ‘‘நான் உட்பட சுமார் 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். எங்களது முடிவு குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். சக எம்பிக்களிடம் கலந்து ஆலோசனை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். பிரதமர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு தர முடிவு செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
