திருமலை: விசாகப்பட்டிணம் உருக்காலையில் இரும்பு குழம்பு கொட்டியதில் 8 தொழிலாளர்கள் பலியாகினர். படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஷிப்ட் வாரியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை உருக்காலையில் இரும்பை உருக்கும் பட்டறை-2 பிரிவில் உள்ள எஸ்.டி.சி. 3 வெப்ப உருக்குக் கலனிலிருந்து 1600 டிகிரி வெப்பத்தில் இருந்த இரும்பு குழம்பு திடீரென கொட்டியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 8 தொழிலாளர்கள் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்தவுடன் உடனடியாக அபாய சங்கு ஊதப்பட்டது. தகவலறிந்த மீட்பு படையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இதுகுறித்து தொழில்துறை அதிகாரிகள் தரப்பினர் கூறுகையில், `எஸ்.எம்.எஸ்-2 பிரிவில் கனரக கிரேனின் உதவியுடன் இரும்பு குழம்புடன் கூடிய கொள்கலனை தூக்கியபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உருக்கிய இரும்பு கொட்டியது. 1600 டிகிரிக்கு மேல் வெப்பம் கொண்ட அந்த இரும்பு குழம்பு கீழே கொட்டியதால், அப்பகுதி முழுவதும் தீப்பிடித்தது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், உயிர் இழப்புகள் ஏற்பட்டது. உருக்காலையை சேர்ந்த ஏராளமான உள் பேரிடர் மேலாண்மைக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். என தெரிவித்தனர். இருப்பினும் பலியானவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
