- இந்தியக் கூட்டணி
- திமுகா
- ஆட்மி
- ராகுல்
- தில்லி
- புது தில்லி
- அட்மி
- இந்தியா கூட்டணி
- ராகுல் காந்தி
- உதயனிட்டி
- மம்தா
- கெஜ்ரிவால்
புதுடெல்லி: காங்கிரஸ் செய்த துரோகத்தால் அதிருப்தி அடைந்த திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லியில் நேற்று நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தன. இக்கூட்டத்தையொட்டி, டெல்லி முழுவதும் ராகுல் காந்திக்கு எதிராக உதயநிதி, மம்தா, சரத்வார், கெஜ்ரிவால் படங்களுடன் கண்டன போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை 2023ம் ஆண்டு ஜூலையில் உருவாக்கின. ஆளும் பாஜவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருந்த இந்தியா கூட்டணி, நாடாளுமன்றத்திலும் ஒன்றிணைந்து செயல்பட்டது. ஆனால், மாநில கட்சிகளுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காங்கிரசின் செயலால் கூட்டணியில் புகைச்சல் ஏற்படத் தொடங்கியது. டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு போட்டியாக காங்கிரஸ் தனித்து களமிறங்கியதால் பாஜ ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒதுங்கத் தொடங்கினார். இதே போல மேற்கு வங்கத்தில் மம்தாவுடனும், கேரளத்தில் இடதுசாரிகளுடனும் காங்கிரஸ் மோதியது பாஜவுக்கு சாதகமாக அமைந்தது.
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக உடனான 20 ஆண்டு கால உறவை ஒரே இரவில் காங்கிரஸ் முறித்துக் கொண்டது. தவெகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் செய்த இந்த துரோகத்தால் தொண்டர்களின் மனவேதனைக்கு மதிப்பளித்து, இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இதே போல, கேரளத்தில் இடதுசாரிகளிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பிரசாரத்தின் போது மார்க்சிஸ்ட்டுக்கு பாஜவுடன் ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம்சாட்டியது. இதை காங்கிரஸ் மேலிட தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரே திரும்பத் திரும்ப கூறியதால் மார்க்சிஸ்ட் கட்சியும் கடும் அதிருப்தி அடைந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மார்க்சிஸ்ட் கடிதம் எழுதியும் எந்த பதிலும் தரவில்லை.
இந்த சூழலில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை டெல்லி முழுவதும் ராகுல் காந்திக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின. திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடன் ராகுல் காந்தி பற்றி அவர்கள் கூறியதாக சில வாசகங்கள் அந்த போஸ்டர்களில் அச்சிடப்பட்டிருந்தன.
‘‘20 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் நம்மை சார்ந்து வளர்ந்து வந்தது. ஆனால் இன்று அவர்கள் நம்மை முதுகில் குத்திவிட்டார்கள்’’ என உதயநிதி கூறியதாகவும், ‘‘காங்கிரஸ் கட்சி அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. எனவே நாம் காங்கிரஸ் கட்சியை சார்ந்து இருக்க முடியாது’’ என மம்தா பானர்ஜி கூறியது போலவும், ‘‘ராகுல் காந்தியிடம் நிலைத்தன்மை இல்லை’’ என சரத்பவார் கூறியதாகவும், ‘‘நாம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம், அந்த வேலையை ராகுல் காந்தியே மிகவும் சிறப்பாக செய்கிறார்’’ என கெஜ்ரிவால் கூறியதாகவும் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் டெல்லி வீதிகளில் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது இந்தியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திட்டமிட்டபடி டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நேற்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தை திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் புறக்கணித்தன. கடும் அதிருப்தியுடன் மார்க்சிஸ்ட், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. மொத்தம் 25 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் நடந்த இக்கூட்டத்தில், காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, பிடிபியின் மெஹபூபா முப்தி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த வேண்டும்
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும் மிரட்டவும் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றிய பாஜ அரசின் மோசமான வெளியுறவுக் கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாக மாறி விட்டது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான வேகத்தில் புதிய முதலீடுகள் வரவில்லை.
லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளையும் லட்சியங்களையும் சிதைத்துவிட்ட தேர்வு முறைகேடுகள் முழுமையான நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே, மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக நாடு எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த சவால்களை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார். கூட்டணியில் பல கட்சிகளும் அதிருப்தியில் உள்ள நிலையில், மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
5 முக்கிய முடிவுகள்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
இந்தியா கூட்டணி கூட்டத்தில் 25 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அனைவரும் அவர்கள் கருத்தை தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 5 முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம்.
- நீட், சிபிஎஸ்இ தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென ஒருமனதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நாட்டின் கவலைக்குரிய தற்போதைய பொருளாதார நிலை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
- இந்தியா கூட்டணி தலைவர்கள் 2 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கவும், அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.
- எஸ்ஐஆர், வாக்கு கொள்ளை மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்தக் கடிதம் விரைவில் தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது சுமூகமான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து சந்திக்க முடிவு செய்தனர். வழக்கம்போல எதிர்க்கட்சித் தலைவரின் அறையில் அவர்கள் சந்திப்பார்கள்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அவருடன் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணியின் பிற மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.
பங்கேற்ற, பங்கேற்காத கட்சிகள்
இந்தியா கூட்டணி கூட்டத்தில், காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ(எம்எல்), ஆர்எஸ்பி, ஐயுஎம்எல், விசிக, மதிமுக, கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (எம்), ஆர்எல்பி, பிஏபி, லோக் தளம், பார்வர்ட் பிளாக் மற்றும் ஷேத்காரி கம்ஹார் பக்ஷ் ஆகிய கட்சிகளின் தலைவர்களும், சுயேச்சை எம்பி கபில் சிபலும் பங்கேற்றனர். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஜேஎம்எம்மின் ஹேமந்த் சோரன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர். திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் பங்கேற்கவில்லை.
