அம்மன் கோயில்களில் எலுமிச்சைப் பழம் ஏன் சிறப்பு?

?பகவான் தசாவதாரங்களில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
– சுமதி, காரைக்கால்.

மீனாய், கூர்மமாய் என்று ஆரம்பித்து பூரணமான கிருஷ்ண அவதாரத்துடன் முடிக்கிறார். இந்த அவதார வரிசை உயிர் களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பெரியவர்கள் கூறுவார்கள்.

?நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறாதபோது கோவிலுக்குப் போவதால் என்ன பிரயோஜனம்?
சுகுணா, ஸ்ரீ வாஞ்சியம்.

கோயிலுக்குச் செல்வதும் ஆலய வழிபாடு நடத்துவதும் ஏதோ ஒரு பிரயோஜனம் காரணமாக என்று நினைக்கிறீர்கள். அதைவிட முக்கியம் நீங்கள் ஏதோ இறைவனுக்காக கோயிலுக்குச் செல்வதுபோல நினைக்கிறீர்கள். இறைவனுடைய நன்மைக்காக யாரும் கோயிலுக்குச் செல்வதில்லை. தங்களுடைய நன்மைக்காகத்தான் கோடிக்கணக்கான மக்கள் தினசரி கோயிலுக்குச் செல்கிறார்கள். நாம் கேட்டது கொடுக்கவில்லை என்று கோபித்துக் கொள்வதில் ஒரு பொருளும் இல்லை.

அங்கே சென்றால் உங்களுக்குத் தெளிவும், மன அமைதியும் கிடைக்கிறதா என்று பாருங்கள். அது கிடைத்து விட்டால் மற்ற பிரச்சனைகளை எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளலாம். உங்களின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் இறைவன் வந்து உதவ வேண்டும் என்று நினைத்தால், நமக்கென்று தனியாக ஆற்றலையும் அறிவையும் ஏன் இறைவன் தந்திருக்க வேண்டும்? பக்திகூட பகுத்தறிவுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.

?இன்று புதிதாகப் பிறந்தோம் என பாரதியார் கூறுவதன் பொருள்என்ன? நாம் என்ன தினம் தினம் பிறக்கிறோமா என்ன?
– கணேஷ்குமார், திண்டிவனம்.

இந்தக் கேள்விக்குகான பதிலை அறிவியல் பூர்வமாகவும் சொல்லலாம். தத்துவ ரீதியாகவும் சொல்லலாம். அறிவியல் பூர்வமாகச் சொல்வதாக இருந்தால் தினம் தினம் நாம் புதிதாகவே பிறக்கிறோம் என்பது உண்மை. ஒவ்வொரு நாளும் நம் உடம்பில் லட்சக்கணக்கான செல்கள் இறக்கின்றன. லட்சக்கணக்கான செல்கள் பிறக்கின்றன. இந்த வளர்சிதை மாற்றம் என்பதைத்தான் புநரபி ஜனனம் புநரபிமரணம்… என்று ஆதிசங்கரர் சொல்லியிருப்பாரோ என்னவோ? எனவே நேற்றைக்கு இருந்த நாம் இன்றைக்கு இல்லை என்பதால் இன்று புதிதாகப் பிறந்தோம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பாரதி தத்துவ அடிப்படையில் இந்த மந்திர வார்த்தையை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லுகின்றார். நேற்றைய கவலைகளையும், தோல்விகளையும், சுமைகளையும் அங்கேயே விட்டுவிட்டு, ஒவ்வொரு புதிய விடியலையும் ஒரு புதிய தொடக்கமாகக் கருத வேண்டும் என்பதே இதன் ஆழமான பொருள். கடந்த கால கசப்புகளை மறந்து, ஒரு குழந்தையின் தூய்மையான மனநிலையுடன் இன்றைய நாளை எதிர்கொள்ள இது அழைப்பு விடுக்கிறது. “முடிந்துவிட்டது” என்று நினைக்காமல், “இனிமேல்தான் தொடங்குகிறது” என்ற உற்சாகத்தை இது அளிக்கிறது.

?கோயிலுக்குச் சென்றால் அமைதியாக வழிபட முடியவில்லை. பலரும் அங்கு வந்து அரட்டை அடிக்கின்றார்கள் ஊர் வம்பு பேசுகின்றார்கள். வியாபாரத் தலமாக போய்விட்டது. எனவே, கோயிலுக்குப் போகாமல் வீட்டிலேயே வழிபாடு நடத்தலாமா?
– கார்த்திக் ஷர்மா, நாகர்கோவில்.

பக்தி என்பது நமக்கும் இறைவனுக்கும் இடையிலான ஒரு அந்தரங்கப் பயணம். அங்கு மற்றவர்களின் நடத்தைக்கு இடம் கொடுக்கக்கூடாது. உலகம் ஒரு சந்தைபோல சத்தமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தச் சத்தத்திற்கு நடுவிலும் அமைதியாக இருக்கும் கலையைத்தான் கோயில் நமக்குக் கற்றுத் தருகிறது. மற்றவர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட, நம் பார்வையை மாற்றிக்கொள்வதே அமைதிக்கு வழி. கவனம் இறைவனிடம் மட்டும் இருந்தால், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கண்ணுக்குத் தெரியாது. மற்றவர்கள் கோயிலைச் சந்தையாக மாற்றினாலும், நீங்கள் அதைச் சந்நிதியாகவே பாருங்கள். அவர்கள் எதைப் பேசினாலும் அது அவர்களின் வினை. நீங்கள் எதைக் கவனிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் பக்தி.

?இறைவனை வசப்படுத்த என்ன வழி?
– வடிவேலன், விழுப்புரம்.

அன்பு ஒன்றே வழி. வேறு எதனாலும் இறைவனை வசப்படுத்த முடியாது. இறைவனை அறிவாலோ, அதிகாரத்தாலோ அல்லது பெரும் செல்வத்தாலோ அடைந்துவிட முடியாது; அதனால்தான் வள்ளலார் “ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” என்றார். அன்பே சிவம் என்பது அடிப்படையான சமய நெறி..“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. மலை போன்ற இறைவனையும் அன்பு எனும் ஒரு சிறு நூலால் கட்டி இழுத்துவிடலாம் என்பதுதான் இதன் பொருள்.
அன்பின் மூன்று நிலைகள்:

* தன்னன்பு: முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும். நம்முள்ளே இருக்கும் இறைத் தன்மையை உணர வேண்டும்.

* பிற உயிர்கள் மீதான அன்பு: “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வரிகளைப் போல, பிறர் துன்பம் கண்டு இரங்குவது.

* இறை அன்பு (பக்தி): எதையும் எதிர்பார்க்காமல் இறைவனிடம் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பு.

இந்த அடிப்படையில் உங்கள் வாழ்க்கையையும் வழிபாட்டையும் அமைத்துக் கொண்டால், இறைவனை நீங்கள் தேட வேண்டியதில்லை இறைவன் உங்களைத் தேடுவான்.

?பிரம்ம முஹூர்த்தத்தின் சிறப்பு என்ன?
– அசோக்குமார், காரைக்குடி.

‘பிரம்ம’ என்றால் படைப்பு அல்லது மேன்மையானது என்று பொருள். ‘முஹூர்த்தம்’ என்றால் ஒரு குறிப்பிட்ட கால அளவு. படைப்பாற்றல் மிக்க நேரமே பிரம்ம முஹூர்த்தம். பொதுவாக, சூரிய உதயத்திற்கு 96 நிமிடங்களுக்கு முன்னதாகத் தொடங்கி, 48 நிமிடங்கள் வரை நீடிக்கும் காலமே பிரம்ம முஹூர்த்தம் எனப்படும். தோராயமாக அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள நேரத்தை நாம் இதற்குக் கணக்கிடலாம்.

இந்த நேரத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் பிரபஞ்சத்தை எளிதில் சென்றடையும்.உலகமே அமைதியாக இருக்கும் அந்த நேரத்தில், நம் மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் எளிது. அதிகாலையில் ‘சத்வ குணம்’ (அமைதி மற்றும் ஞானம்) மேலோங்கி இருக்கும். இது எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை ஆற்றலை நிரப்பும். பிரம்ம முஹூர்த்தத்தில் எழுவது என்பது வெறும் பழக்கம் மட்டு மல்ல, அது ஒரு வாழ்வியல் மாற்றம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், சில நாட்கள் பழகிவிட்டால், நாள் முழுவதும் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடனும், தெளிவுடனும் இருப்பதை உணர முடியும்.

?மனதில் ஆயுள் பயம் வரும்போது என்ன சுலோகம் சொன்னால் மனது தெளிவடையும்?
– உஷாராணி, அம்பத்தூர்.

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லலாம். இந்தமந்திரம் சிவபெருமானுக்கு உரிய மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும், இது மரண பயத்தைப் போக்கி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அருளக்கூடியது. ரிக் வேதம் மற்றும் யஜூர் வேதம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது தீராத நோய்களைக் குணப்
படுத்தி, மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும்.

மந்திரம்
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்

இதன் பொருள்: இறைவனே, நறுமணம் மிக்கவனே, அனைவரையும் வளர்ப்பவனே! பழுத்த வெள்ளரிக்காய் அதன் காம்பிலிருந்து விடுபடுவதுபோல, நாங்கள் மரணத்தின் பிடியிலிருந்தும், பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்தும் விடுதலை பெற்று, மோட்சத்தை அடைய அருள்புரிய வேண்டு
கிறோம். தினமும் 9, 11, 21, 51 அல்லது 108 முறை ஜபிக்கலாம்.

?அம்மன் கோயில்களில் எலுமிச்சைப் பழம் ஏன் சிறப்பு?
– நாகராஜன், திருத்தணி.

அம்மன் கோயில்களில் எலுமிச்சை, தீய சக்திகளை அகற்றும் கவசமாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருளாகவும், உக்கிரமான தேவியின் கோபத்தைத் தணித்து குளிர்ச்சியூட்டும் (சாந்தப்படுத்தும்) ஒரு வழிபாட்டுப் பொருளாகவும் சிறப்புப் பெறுகிறது. தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது. எலுமிச்சைப்பழம் பலி செலுத்த உகந்த பழமாகக் கருதப்படுகிறது. எலுமிச்சை பழத்தில் வெளித்தோற்றம் தோல் என்றும், அதற்குள் இருக்கும் பழம் நிறைந்த பாகம் மாமிசம் என்றும், அதில் உள்ள சாறு ரத்தமாகவும் பாவிக்கப்படுகிறது.

?காக்கை தலையில் தட்டினால் என்ன சகுனம்?
– புஷ்பராஜ், தஞ்சாவூர்.

பொதுவாக நம் ஊர்களில் காக்கை தலையில் தட்டினால் (கொத்தினால் அல்லது உரசிச் சென்றால்), அது ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போவதற்கான அறிகுறி அல்லது சகுனம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. குறிப்பாக இது “சனியின் பார்வை” அல்லது முன்னோர்களின் கோபம் என்று சிலர் பயப்படுவதுண்டு. ‘‘அன்பே சிவம்’’ என்ற உயரிய சிந்தனை கொண்டவர்களுக்கு, இது போன்ற சகுனங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இதை ஒரு எச்சரிக்கையாகக் கருதலாம். அதாவது, “இன்று சற்று கவனமாக இரு” என்று இயற்கை நமக்குத் தரும் ஒரு சமிக்ஞையாக எடுத்துக்கொள் ளலாம். மனதார இறைவனை வேண்டி, முன்னோர்களை நினைத்து காக்கைக்கு ஒரு பிடி சோறு வைப்பது உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

?சமய மரபில் ஆறுகளுக்கு பெண்கள் பெயராக ஏன் வைத்திருக்கிறார்கள்?
– பாஸ்கர், பொள்ளாச்சி.

‘‘ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்’’ என்ற வள்ளலாரின் கொள்கையை இயற்கை வடிவில் செய்து கொண்டிருப்பவை ஆறுகள். அந்த அன்பின் வடிவமாகவே நாம் ஆறுகளைப் பெண் பெயரிட்டு, தெய்வமாக வணங்குகிறோம். நம் முன்னோர்கள் ஆறுகளைப் பெண்களாகக் கருதியதால்தான், அவற்றை அசுத்தம் செய்யாமல் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள். அந்தப் பார்வை மீண்டும் நமக்குத் தேவைப்படுகிறது.இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா ஆறுகளும் பெண் பெயர்களையே கொண்டுள்ளன. ஆனால், ‘பிரம்மபுத்ரா’ (பிரம்மாவுடைய மகன்) ஆறு மட்டும் ஆண் பெயரைக் கொண்டுள்ளது. அதன் ஆக்ரோஷமான வேகம் மற்றும் பிரம்மாண்டம் காரணமாக அது ‘நதி’ (ஆண்) என்று அழைக்கப்படுகிறது.

?குரு மங்கள யோகம் என்ன செய்யும்?
– ஸ்ரீ தரன், திருவல்லிக்கேணி

ஜோதிடத்தில் குரு மங்கள யோகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘குரு’ என்றால் வியாழன் கோளையும், ‘மங்களன்’ என்பது செவ்வாய்க்கோளையும் குறிக்கும். இந்த இரு கிரகங்களும் இணையும்போது அல்லது ஒருவரை ஒருவர் சம சப்தமமாக (நேருக்கு நேர்) பார்க்கும் போது இந்த யோகம் உண்டாகிறது. குரு அறிவிற்கும், செவ்வாய் வீரத்திற்கும் காரகர்கள். இந்த யோகம் உள்ளவர்களுக்கு சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமாக இருக்கும். எதற்கும் அஞ்சாத துணிச்சலும், அதே சமயம் நிதானமான புத்திசாலித்தனமும் இவர்களிடம் இருக்கும்.

அரசு வேலை, ராணுவம், காவல்துறை அல்லது பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு இவர்களுக்குத் தேடி வரும். நிர்வாகத் திறமையில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், இந்த யோகம் உள்ளவர்களுக்கு நிலம், வீடு, வண்டி வாகனங்கள் போன்ற சொத்துக்கள் தடையின்றி அமையும்.சமூகத்தில் ஒரு தனி கௌரவம் மற்றும் செல்வாக்கு இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒரு ‘குரு’ போன்ற நிலையில் இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய சொல்லுக்குப் பிறர் மதிப்பளிப்பார்கள். இந்த யோகம் முழுமையான பலன் தர வேண்டுமானால், குருவும் செவ்வாயும் ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய மறைவு வீடுகளில் இருக்கக் கூடாது. மேலும், பகை வீடுகளில் இல்லாமல் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றிருந்தால் பலன் இரட்டிப்பாகும்.எல்லாவற்றையும் விட குரு தசையோ செவ்வாய் தசையோ வர வேண்டும்.

தேஜஸ்வி

Related Stories: