சென்னை: ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசே சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா என தி.மு.க ஐடி விங் விமர்சித்துள்ளது. தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சியின் உழைப்பில் உருவான திட்டங்களுக்கு “ஸ்டிக்கர்” ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் தவெக அரசும், உண்மையை உரக்கச் சொல்லாமல் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்ட சில ‘பச்சோந்தி’ ஊடகங்களும் மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பதிவுத்துறையில் காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, ஆன்லைன் வில்லங்கச் சான்று என 18 சேவைகளை உள்ளடக்கிய “ஸ்டார் 3.0” (STAR 3.0) மென்பொருள் திட்டத்தை, முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 2026-லேயே (22.01.2026 & 23.01.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துவிட்டார். இதற்கான செய்தித்தாள் மற்றும் ஊடக ஆதாரங்களையும் தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ளது.
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் தவெக அரசும், அதன் ‘Toxic’ ஐடி விங் போராளிகளும், இந்தத் திட்டத்தைத் தங்களது புதிய கண்டுபிடிப்பு போலவும், ‘வரலாற்றுச் சாதனை’ போலவும் கட்டமைக்க முயல்வது அப்பட்டமான திருட்டுத்தனம் என குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கேள்வி கேட்க துப்பற்ற சில ஊடகங்கள், ஆளுங்கட்சி வீசும் எலும்புத்துண்டுக்காக உண்மையை மறைத்து, தவெக-வின் மலிவான பி.ஆர் (PR) ஏஜென்சிகளாகச் செயல்படுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு என்றும் தி.மு.க ஐடி விங் விமர்சித்துள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2000-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்த ஸ்டார் திட்டத்தின் தொடர்ச்சியை, 2026-ல் திமுக அரசு “ஸ்டார் 3.0” ஆக தரம் உயர்த்தியது. அடுத்தவர் உழைப்பில் உருவான திட்டத்தில் வெட்கமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசே… சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா? என்று தி.மு.க ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. ஊடகங்களை விலைக்கு வாங்கி ஊரை ஏமாற்றிவிடலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்! புள்ளிவிவரங்களும், ஆதாரங்களும் உங்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியும் என்றும் தி.மு.க ஐடி விங் தெரிவித்துள்ளது.
