சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை காவல்துறை, டிஜிபிக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 34 ஹார்ட் டிஸ்க்குகளை திருடியதாக கணினி பராமரிப்பாளரான கோபிநாத் உள்ளிட்ட 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மின்வாரியத்தில் நடைபெற்ற பல டெண்டர்கள் தொடர்பான ஆவணங்கள் அந்த ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்திருக்கலாம். அதன் காரணமாக தான் அவை திருடப்பட்டதாகவும் பல கருத்துக்கள் எழுந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறை பரிந்துரையின் பேரில் தமிழக டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடி அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக என்ன காரணத்துக்காக ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டது. வேறு ஏதும் அரசியல் காரணம் உள்ளதா அல்லது டெண்டர்கள் தொடர்பான ஏதேனும் ஆவணங்களை அளிப்பதற்காக திருடப்பட்டதா என்ற சந்தேகங்கள் இருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
