புதுடெல்லி: பதவிக்காக யாரையும் கழற்றிவிடும் காங்கிரசின் சுயரூபம் டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் மீண்டும் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் திருப்பமாக, திமுகவுடனான 20 ஆண்டு கால உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து, தமிழக அரசில் 2 அமைச்சரவை இடங்களை காங்கிரஸ் தட்டிச் சென்றது. இதற்கு கைமாறாக, தமிழகத்தில் காலியான ஒரு ராஜ்யசபா சீட்டையும் விஜய்யிடம் இருந்து லாவகமாகப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ், நாடாளுமன்ற மேலவையில் தனது பலத்தை உறுதி செய்து கொண்டது.
பதவிக்காகக் காலில் விழுவதும், காரியம் முடிந்ததும் கைகழுவுவதும் காங்கிரசுக்குப் புதிதல்ல என்பதை இந்தத் தேர்தல் கூட்டணி ஏற்கனவே நிரூபித்திருந்தது. ஆனால், தவெக தோள் மீது ஏறி பதவி சுகத்தை அனுபவிக்கும் காங்கிரஸ், இப்போது டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திற்கு விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் முதுகில் குத்தியுள்ளது. ‘நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.,க்கள் இல்லாத கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது’ என விதிகளைச் சொல்லி, நடிகர் விஜய்யை வாசலில் நிற்க வைத்து காங்கிரஸ் அவமானப்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா சீட்டைப் பெறும்போது தெரியாத இந்தத் தகுதி, இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கூட்டணி தர்மத்தை விட, தங்களுக்குத் தேவையான ஆதாயத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் காங்கிரசின் பச்சோந்தித் தனத்தால் தவெக நிர்வாகிகள் கடும் கொதிப்பில் உள்ளனர். சினிமாவில் வருவது போல அரசியலிலும் உடனே சிம்மாசனம் கிடைக்கும் என்று கனவு கண்ட விஜய்க்கு, டெல்லி அரசியல் என்றால் என்ன என்பதை காங்கிரஸ் பாடம் புகட்டியுள்ளது.
‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து விவாதிப்பதே கூட்டத்தின் நோக்கம் என்பதால், அங்கு எம்பி இருக்கைகள் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை’ என்று காங்கிரஸ் கூறியது, சினிமா செல்வாக்கை மட்டும் நம்பி வந்த விஜய்க்கு விழுந்த பலத்த அடியாகும். இதற்கிடையே, தங்களை ஏமாற்றிவிட்டுச் சென்ற காங்கிரசுடன் அமர முடியாது என திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் தனி இடம் கேட்டுள்ளதால், ஒட்டுமொத்த ‘இந்தியா’ கூட்டணியும் கலகலத்துப்போய் உள்ளது.
