- தமிழ்நாடு அரசு
- திருப்பரங்குன்றம் மலை
- சென்னை
- எம்எம்ஏ
- Jawahirullah
- திருப்பரங்குன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று தலைவர்கள் கூறியுள்ளனர்.
மமக தலைவர் ஜவாஹிருல்லா: திருப்பரங்குன்றம் பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. அங்கு கடந்த திமுக அரசு எடுத்த அதே சமநிலையான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடர்ந்து கடைப்பிடிப்பது, தமிழகத்தின் மதச்சார்பின்மை மரபையும் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
“சமூக அமைதி முதன்மை” என்ற அணுகுமுறையே தமிழ்நாட்டை பிற மாநிலங்களிலிருந்து தனித்துவப்படுத்தி வருகிறது. மத அடிப்படையிலான மோதல்களை தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயலும் சக்திகளுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து சரியான பதிலளித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் அரசியல் பண்பாடும் மக்கள் மனநிலையும் வெறுப்பை அல்ல, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஆதரிப்பவையாகும்.
எனவே, கடந்த திமுக அரசின் நடைமுறைகளை தொடர்வதன் மூலம் சமூக அமைதியையும் அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்கும் தமிழக அரசின் இந்த அணுகுமுறையை மமக வரவேற்கிறது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் எந்த முயற்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்:
முந்தைய திமுக அரசும் மதவாத சக்திகளின் அதிகார ஆட்டத்தை முழுவீச்சோடு எதிர்த்து நின்றது. தற்போது பொறுப்பேற்று இருக்கும் புதிய அரசு இந்த விவகாரத்தில் மதவாத சக்திகளுக்கு துணை போய் விடக்கூடாது என்று பலரும் கருத்து கூறிவந்த நிலையில் தவெக அமைச்சர் நிர்மல்குமாரின் சமீபத்திய பேட்டி நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. அவர் தனது பேட்டியில் மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்.
தீபம் ஏற்றும் விவகாரத்தில் முன்னர் இருந்த நடைமுறைகளே தொடரும், மதவாத சக்திகள் இதில் அரசியல் செய்யமுடியாது இதுவே அரசின் கொள்கை என்று சொல்லியுள்ளார். உண்மையில் இது வரவேற்கத்தக்கது.
சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் தவெக அரசு நடக்கும் என்று எதிர்பார்ப்பதுடன் இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு மத விவகாரங்களில் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கு முயலும் பாஜ உள்ளிட்ட சங்க பரிவார தீய சக்திகளின் அரசியலை எதிர்த்து தவெக அரசு களமாட வேண்டும்.
