×

சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திற்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா? ஒன்றிய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்த்தியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி: சமையல் எரிவாயு உருளை விலை அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்களுக்கு தாங்கிக் கொள்ள வேண்டும்; மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு விலையை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்த்தி வரும் போக்கு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக பொது மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 11ம் தேதி முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் போது காஸ் விலை உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு சார்பில் ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து, காஸ் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்டிபிஐ கட்சி மாநில பொருளாளர் முஸ்தபா: ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை முற்றிலும் சீர்குலைக்கும் செயலாகும். சமீபத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் பெருமளவு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறையும் காலங்களில், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் விலையைக் குறைக்க மறுக்கும் அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் மீது திணிக்கிறது. மக்களுக்கு எவ்வித நன்மையும் தராத இந்த ‘விலை நிர்ணயக் கொள்கை’ அப்பட்டமான மக்கள் விரோதப் போக்காகும். எனவே, ஏழை மற்றும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Tags : Union government ,Chennai ,PMK ,Anbumani ,
× RELATED திருச்செந்தூரை தொடர்ந்து...