சென்னை: ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பதிவுத்துறையில் இணையவழியில் வருகை இல்லா ஆவணப் பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த, பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தின் மூலம் இணையவழியாகத் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு புலனம் மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
‘‘வருகை இல்லா ஆவணப்பதிவு” நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு சில நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள் ஆகிய ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வழக்கறிஞர்கள் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை(இரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள்,எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்யவேண்டும்.
ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். இவற்றிற்கு இணைய இணைப்பு, உதய்(UIDAI) அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி, புகைப்படக் கருவி ஆகியவை தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது. வன்பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு முகமது யூனுஸ் 7397574067, அருண்குமார் 9940446694 மற்றும் மென்பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு சீனிவாஸ் கணேஸ் 6369798973, டில்லி பாபு 8525805957 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் எனப் பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
