×

இந்தியாவின் அதி சுவையான அல்போன்சா, கேசர் வகை மாம்பழங்கள் ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் மூலம் வெளிநாடு பறக்கிறது

சென்னை: இந்தியாவின் சிறப்பு வாய்ந்த சுவைமிக்க மாம்பழங்களான அல்போன்சா மற்றும் கேசர் வகை மாம்பழங்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளுக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானங்களில் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை மூன்று மாதங்களில், 1,000 டன்களுக்கு மேல், மாம்பழங்கள் ஏர் இந்தியா பயணிகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்ற சுவைமிக்க மாம்பழங்களை சரக்கு விமானங்களில் அனுப்பி வைத்தால், வெளிநாடுகளுக்கு காலதாமதமாக போய் சேர்வதோடு, அதன் சுவை குறைந்து விடும் என்பதால், ஏர் இந்தியா விமான நிறுவனம், பயணிகள் விமானங்களில், பயணிகள் அமரும் பகுதியின் கீழ் உள்ள சரக்கு பகுதியில், 15° முதல் 20° சென்டி கிரேட் குளிர்சாதன வசதியுள்ள அறைகளில் பாதுகாப்பாக வைத்து எடுத்துச் செல்கிறது. மாம்பழங்கள் மட்டுமல்லாமல் பல வகை காய்கறிகள், வேளாண் பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த மூன்று மாத காலத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு, வாரத்திற்கு 180 டன் வரை காய்கறிகள், மாம்பழங்கள், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டன. பிராங்க்பர்ட் விமான நிலையத்திற்கு 40 டன்களையும், துபாய், நியூயார்க் நகரங்களுக்கு தலா 30 டன்களும் ஒவ்வொரு வாரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, பெங்களூர் விமான நிலையங்களில் இருந்து அதிகளவிலான மாம்பழங்கள், வெளிநாடுகளுக்கு இதை போல் பயணிகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உற்பத்தியாகும் உயர்ரக மாம்பழங்கள், சென்னையில் இருந்து இதைப்போல் விமானங்களில் வெளிநாட்டிற்கு அதிகளவில் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஆந்திர மாநில மாம்பழம் ஏற்றுமதியாளர்கள், சென்னை விமான நிலையத்திற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யக் கொண்டு வராமல், பெங்களூர் விமான நிலையத்திற்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் மாம்பழங்கள் ஏற்றுமதியில், பெங்களூரை விட சென்னை தற்போது பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Air India ,Chennai ,US ,Germany ,
× RELATED திருச்செந்தூரை தொடர்ந்து...