சென்னை: அதிமுக ஐடி விங் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: அட ஆச்சரியக்குறிகளே. எம்ஜிஆர் அண்ணா தோற்றுவித்த திமுகவின் போர்வாளாக திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர். அதிமுகவை தோற்றுவித்தவர். அம்மா கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர்.
சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது அதிமுகவின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் அம்மா. வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?. தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது? அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே? 8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில், பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில், தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில், உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் நடிகர் விஜய்? அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்? இலங்கை தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசுவை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு.
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்? நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு டிவிட்டர் ஐடி விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் மாபெரும் அரசியல் வரலாறு எங்களுக்கு தெரியாதா என்ன? கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா? கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?.
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது? அதிமுக தீர்ந்து போன சக்தியாம். விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்து விட்டு தமிழகத்தை அலங்கோலப்படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
