சென்னை: திமுக தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம். உண்மையின் முகம் இதுதான். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு ‘‘வரலாற்றில் முதன்முறை” என விளம்பரப்படுத்தி வருகிறது.
ஆனால், இது திசைதிருப்பும் வேலை. உண்மையின் பின்னணி இதோ. 2000-2001ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் ‘சீனியாரிட்டி’ விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது. நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது. தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை செயற்பொறியாளர் பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?. மீதமுள்ள 116 ஏஇஇ-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப்பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மவுனம் காப்பது ஏன்?. தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு. மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. தற்போது ஜூன் 6ம் தேதி 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை.
