வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ கைது: என்ஐஏ அதிரடி

 

கொல்கத்தா: பன்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லாவை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தட்சின் பாமுனியா கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்; 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குண்டு தயாரிப்பவர்களை அழைத்துச் சென்ற கார் டிரைவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கேனிங் பூர்பா தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லாவின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையிட்டு வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சவ்கத் மொல்லாவை நேற்று இரவு என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான முன்னாள் எம்எல்ஏவை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா பகுதியில் அவர் தங்கியிருந்தபோது பிடிபட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். முன்னதாக சவ்கத் மொல்லாவை தேடப்படும் நபராக அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவர் பிடிபட்டுள்ளார். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Related Stories: