ஆந்திராவில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து குவித்த கலெக்டர் அலுவலக உதவியாளர்: ஊழல் தடுப்பு அதிகாரிகள் ரெய்டில் சிக்கினார்

திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா கலெக்டர் அலுவலக மூத்த உதவியாளராக சிவராம்குமார் பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காக்கிநாடாவில் உள்ள சிவராம்குமார், அவரது மாமா சிந்தலா சீனிவாசன் வீடு, கலெக்டர் அலுவலகம், சிடிகாவில் உள்ள சகோதரி நாகிஷா சுஷ்மாவின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, காக்கிநாடாவில் உள்ள அபார்ட்மெண்ட்ஸில் சிவராம்குமார் பெயரில் ரூ.1.24 கோடியில் 3 படுக்கையறை வீடு, அவரது மனைவி பெயரில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4 படுக்கையறை வீடு, ரங்காரெட்டி மாவட்டம் கொண்டாபூரில் உள்ள அபார்ட்மெண்ட்ஸில் ரூ.1.34 கோடியில் 3 படுக்கையறை வீடு, ரங்கம்பேட்டை அடுத்த கோட்டபாடுவில் ரூ.27.64 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலங்கள், ரூ.98.74 லட்சம் மதிப்புள்ள கார்கள், மேலும் ரூ.1.06 கோடி மதிப்புள்ள 700 கிராம் தங்க நகைகள், ரூ.27.32 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள செல்போன், லேப்டாப், 9 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் என சுமார் ரூ.8 கோடிக்கு சொத்துக்கள் கண்டறியப்பட்டது.

இந்த சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து முடக்கினர். தொடர்ந்து அவரை கைது செய்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: