ஜேஇஇ தரவு கசிவு விவகாரம் ஒன்றிய கல்வி அமைச்சர் முற்றிலும் திறமையற்றவர்: கரப்பான் பூச்சி கட்சி தாக்கு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று கரப்பான் பூச்சி கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில், ஐஐடி கான்பூர் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் மாணவரும் கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளருமான அசுதோஷ் ரங்கா கூறியதாவது: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஐஐடி ரூர்க்கி இணையதளத்தில் ஏற்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 லட்சம் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, மொபைல் எண், புகைப்படம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

இதனை ஒரு இளம் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்து கூறிய பிறகு ஐஐடி ரூர்க்கி ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்தும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கிய நாட்டில், கல்வி அமைச்சரும், அரசும் அடிப்படை அமைப்புகளைக் கூட பாதுகாப்பாக இயக்க முடியாத அளவுக்கு திறமையற்று உள்ளனர்.

ஒன்றிய கல்வி அமைச்சர் முற்றிலும் திறமையற்றவர். எனவே அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இது நமது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது. இதில் பல முக்கிய விஷயங்கள் ஆபத்தில் உள்ளன. பொது நிறுவனங்களை நிர்வகிக்க, அறிவியல் மனப்பான்மையும் தொழில்நுட்ப திறமையும் கொண்ட நபர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: