புதுடெல்லி: டெல்லி ஓட்டல் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த வழக்கில் கட்டிட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹவுஸ் ராணி பகுதியில் மிகவும் பிரபலமான ப்ளோரிஷ் ஸ்டே பி அன் பி என்ற ஓட்டல் மற்றும் உணவக வளாகத்தில் நேற்றுமுன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 11 பேர் வெளிநாட்டினர். மேலும் காயத்துடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 10 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த ஓட்டல் தேவையான தீயணைப்பு பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. வெறும் 6 அறைகள் நடத்த மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், அந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக 25 அறைகள் அமைக்கப்பட்டு ஓட்டல் நடத்தப்பட்டுள்ளதும், கட்டிடத்தின் தரைதளத்தில் விதிகளை மீறி அறைகள் அமைக்கப்பட்டுள்ளதும், உரிமம் இல்லாத சட்ட விரோத உணவகம் இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கு பிறகு ஓட்டல் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளரான லவ்கேஷ் பஜாஜ் தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரை கண்டுபிடிக்க ‘லுக் அவுட் சர்குலர்’ வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேலாளர் ஜெய் மிஸ்ராவை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
