×

ராமநாதபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘தமிழி நடுகல்’ கண்டுபிடிப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் கண்டெடுப்பாக, மாவட்டத்தில் முதல் முறையாக சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகள் பொறிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் கிராமத்தின் ஆண்டியேந்தல் பகுதியில் அமைந்துள்ள அரியநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் இந்த கல்வெட்டு மண்மூடிக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் குடமுழுக்கு திருப்பணியின்போது இந்தக் கல் வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், அது கல்வெட்டு என்பது தெரியாமல் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோயிலுக்கு வந்த மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் முனியசாமி, கல்வெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையச் செயலாளர் சாந்தலிங்கத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சாந்தலிங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து கல்வெட்டை வாசித்தனர்.

தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் வாசகம்; ஆபன்னூர் ஏறிய மாண்டு விழுந்த அத்தியன் கீரன்கல் என்பதாகும். இதன் பொருள், ஆப்பனூரில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த கீரன் என்ற வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பதாகும். இதில் அத்தியன் என்பது வீரனின் தந்தை பெயராகவும், “கீரன்” என்பது வீரனின் பெயராகவும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

இந்தக் கல்வெட்டின் காலக்கணிப்பு மற்றும் உண்மைத்தன்மை குறித்து கல்வெட்டு நிபுணர்களான சுப்பராயலு, மார்க்சியகாந்தி மற்றும் ராஜகோபால் ஆகியோரின் கருத்துகளும் பெறப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக சாந்தலிங்கம் கூறினார்.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,
× RELATED குடியிருப்பு பகுதியில் உலாவிய யானை...